“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகுமா?”
“வரலாறு” - ஒரு சிறிய நிகழ்வை மறைத்துவிட்டால், வரலாற்றின் ஒரு பெரும் பகுதியை மூடி மறைத்துவிடலாம்.
“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகுமா?” என்னும் கேள்வி எம்மவர் பேச்சுவழக்கில் அப்பப்போது பயன்படுவதைக் கேட்டிருப்போம். “சீப்பு” என்பது ஒரு சிறிய பொருள். “திருமணம்” என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கியமான பெரிய நிகழ்வு. ஒரு சிறிய பொருளை மறைத்து வைப்பதால், ஒரு பெரிய நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது, என்பதே இச்சொல்லாடல் எமக்கெடுத்துரைக்கும் விளக்கமாகும். ஆனால், “வரலாறு” என்னும் போது, ஒரு சிறிய நிகழ்வை மறைத்துவிட்டால், வரலாற்றின் ஒரு பெரும் பகுதியை மூடி மறைத்துவிடலாம். அதனை இலங்கை வரலாற்றிலும் செய்துள்ளனர். அதென்ன சிறிய நிகழ்வு? வரலாற்றின் எப்பகுதியை மூடி மறைத்தனர்?
வாருங்கள், அதனைத்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
மறைக்கப்பட்ட சிறிய நிகழ்வு எதுவென்றால், A9 நெடுஞ்சாலை போடப்பட்ட வரலாற்றை மறைத்ததாகும். உடனே, அதெப்படி A9 நெடுஞ்சாலைப் போடப்பட்டதை மறைத்தனர், என்னும் கேள்வி உங்களிடம் எழலாம். A9 நெடுஞ்சாலையைப் பற்றித் விக்கிப்பீடியாவில் தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் கட்டுரைகள் உள்ளன. அவற்றைக் கீழுள்ள தொடுப்புகள் ஊடாகப் பாருங்கள்.
தமிழ்: https://ta.wikipedia.org/s/p51
ஆங்கிலம்: https://en.wikipedia.org/wiki/A9_road_(Sri_Lanka)
சிங்களம்: https://tinyurl.com/3b4uadps
ஆனால், அவை எவற்றிலும் A9 நெடுஞ்சாலை போடப்பட்ட வரலாறு இருக்காது.
விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் “வரலாறு” என்னும் ஒரு பகுதியிருக்கும். ஆங்கில விக்கியில் இந்த A9 Highway (Sri Lanka) கட்டுரையிலும் History என்னும் பகுதி உள்ளது. ஆனால், அதிலும் அதன் வரலாறு இல்லை. மாறாக, போர்ச்சூழலில் அப்பாதை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது பற்றியும், போரின் பின்னர் மீண்டும் அப்பாதை எப்படித் திறக்கப்பட்டது என்பது பற்றியுமே உள்ளது. விக்கிப்பிடியாவில் மட்டுமல்ல, ஏனைய கலைக்களஞ்சியங்களிலோ இணையத்தளங்களிலோ கூட அதன் வரலாற்றைக் காண்பதற்கில்லை. இலங்கைப் பள்ளிக் கல்வியிலும் இது தொடர்பான எப்பாடமும் இல்லை. திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவைப் போர்த்துக்கேயர் 1505 -1658 ஆண்டனர். அதன்பின்னர், ஒல்லாந்தர் 1656 -1796 ஆண்டனர். அதன்பின்னர், பிரிட்டிசார் 1796 - 1948 வரை ஆண்டனர். 1948-இன் பின்னர் சிங்களவர் ஆட்சித் தொடர்கிறது... கண்டி இராச்சியம் இலங்கையின் நடுப்பகுதியில் இருந்ததாலும், மலை பகுதியாய் இருந்ததாலும், அதனைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதனால், கண்டி இராச்சியம் (1803-1815) நீண்டகால போரின் பின்னரே ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது. அதன்பின்னரே, பெருமளவு தமிழர்-பெருநிலப்பரப்பு (தற்போதைய தமிழ்நாடு) தமிழரும் மலையாளிகளும் பெருந்தோட்டத் தொழில்களுக்குக் கொண்டுவரப்பட்டனர். பெருந்தோட்டத்தின் விளை பொருற்களைக் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டு செல்வதற்கு 1820-ஆம் ஆண்டு பிரிட்டிசார் A1 நெடுஞ்சாலையைப் போடப்பட்டது. அதுவே இலங்கையில் போடப்பட்ட முதலாவது நெடுஞ்சாலையாகும்.
ஆயினும், கண்டி இராச்சியத்துக்கும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கும் இடைப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு யானை, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும் அப்படியேதான் இருந்தது. தற்போதும் பெரும்பகுதி காடாகத்தான் உள்ளது. (படத்தைப் பார்க்கவும்.)
1830-களின் பின்னர், பிரிட்டிசார் காலத்தில்தான் அக்காட்டை ஊடறுத்து A9 நெடுஞ்சாலை போடப்பட்டது. அதுவே, கண்டி இராச்சியத்துக்கும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கும் இடையே தரைவழி தொடர்பை ஏற்படுத்தியது. அதனால், அந்த நெடுஞ்சாலையைக் “கண்டி-யாழ் நெடுஞ்சாலை” என்றும் அழைப்பர். அதன் நீளம் 325 கிலோமீட்டர் (202 மைல்) ஆகும்.
அதேவேளை தொடருந்து பாதைக்கான திட்டம் 1890-களில் தொடங்கப்பட்டது. முதலில் சரக்கு தொடருந்துகள் 1893-இலிருந்து ஓடின. முதலாவது யாழ்தேவி ஓட்டம் 1950-களில் தொடங்கியது.
இவை ஏன் முக்கியம் என்றால், இந்த A9 நெடுஞ்சாலை திறந்த பின்னர்தான், வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்த குளங்களின் திருத்தற்பணிகள் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாண மக்கள் கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் வந்து குடியேறினர். பெரும்பாலும் குடியேறியோர் தீவகத்தார் ஆவர். 1977-ஆம் ஆண்டு, 1983-ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ்-சிங்கள இனக்கலவரங்களின் பின்னர் மலையகத் தமிழரும் இப்பகுதிகளில் வந்து குடியேறினர்/ குடியேற்றப்பட்டனர். இக்குடியேற்றங்கள் எப்படி இருந்தன என்றால், ஒரு சட்டையின் (Shirt) முன் நடுகோடு போன்று A9 நெடுஞ்சாலையும் அதனிடையிடையே இருக்கும் பொத்தான்கள் போன்று கிளிநொச்சி, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை, வவுனியா எனக் குளங்களை அண்டிய இடங்களில் குடியேற்றங்கள் இருந்தன. ஏனைய பகுதிகள் காடாக இருந்தன.
அதேவேளை, அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அது வவுனியாவின் தெற்கு வரை தொடர்ந்தது. அதனால், வவுனியா நகரம் தமிழருக்கும் சிங்களவருக்குமான எல்லையாகவும் வணிக மையமாகவும் மாறியது. இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், A9 நெடுஞ்சாலை திறப்பதற்கு முன்பு எவரும் இப்பகுதிகளில் வாழவில்லையா, என்று.
இதுதான் மறைக்கப்பட்ட/ மறைக்கப்படும் வரலாறாகும்.
பண்டார வன்னியன் உடனான போர் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், மாவீரன் பண்டார வன்னியன் மன்னன் வன்னியில் 1785 - 1811 களில் பிரிட்டிசாருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவன் ஆவான். அவனது இறப்பின் பின்னர் அவனுடன் போரிட்ட Lt. von Driberg ஒரு நினைவு கல்லையும் வைத்துள்ளான். அதனூடாக வன்னிப் பெரும்நிலப்பரப்பில் தமிழர் வாழ்ந்தனர் எனும் தரவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பண்டார வன்னியன் காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பு என்பது மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருக்கோனமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், அம்பாறை போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதுமட்டுமல்ல, இன்று தமிழர் செறிந்து வாழும் வன்னி பெருநிலப்பரப்பிலும், அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற சிங்களவர் வாழும் பகுதிகளிலும் உள்ள ஊர்ப் பெயர்கள் எப்படித் தமிழ்ப் பெயர்களாக உள்ளன, என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆம், அங்கெல்லாம் தமிழர் சிற்சிறு கமங்களாக (ஊராக) வாழ்ந்தனர். அவர்கள் குளங்களின் நீரைப் பயன்படுத்திக் கமஞ்செய்து வாழ்ந்த கமக்காரர்களாவர். அதனால், அவர்களது ஊரின் பெயரும் அவ்வூரின் குளத்தின் பெயராகவே இருக்கும். இன்று கிடைக்கும் தரவுகளின்படி கிட்டத்தட்ட 10,000 குளங்கள் அப்பகுதிகளில் உள்ளன. அதிலும் 3,500 குளங்கள் பல ஊர்களுக்கு நீர் வழங்கும் சிறந்த நீர் மேலாண்மை திட்டங்களுடன் கூடிய பெரிய குளங்கள் ஆகும். அவை தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. அத்துடன், அக்குளங்களை அண்டி வாழ்ந்த கமக்காரர் சிற்சிறு கமங்களாகத் தமக்குத் தேவையானவற்றைத் தாமாகவே பயிர்செய்து வாழ்ந்து வந்துள்ளனர். பெரும்பாலும் வீட்டுக்காணி, வயற்காணி எனக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கமமும்/ ஊரும் 10 முதல் 60 பேர் கொண்ட சிற்றூர்களாக இருந்துள்ளன.
993-ஆம் ஆண்டு சோழர் ஆட்சிக்காலம் முதல் பிரிட்டிசார் காலம் வரை, அடர் காடுகளில் மறைந்து கிடந்த அநுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற இடங்கள் Harry Charles Purvis Bell என்பவரால் மீள்-கண்டுபிடிப்புக்கு உள்ளானது.
(ஆனால், இலங்கை வரலாறு 993–1077 வரை 84 ஆண்டுகள் மட்டுமே சோழர் ஆட்சி இலங்கையில் நிலவியதாகக் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. உண்மையில் சோழர் ஆட்சி இலங்கையில் எவ்வளவு காலம் நீடித்தது என்பது தொடர்பான எந்தத் தரவும் இல்லை. ஆயினும் பிரிட்டிசார் வரும்வரை அப்பகுதிகளில் எந்தச் சிங்களவரும் ஊடுருவவில்லை என்பது மட்டும் உறுதியாகும்.)
H. C. P. Bell என்பாரின் மீள்-கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான், சிங்களவர் அப்பகுதிகளில் குடியேறத்தொடங்கினர். அதிலும் 1948-இன் பின்னர்தான் பெருமளவிளான சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அதற்குமுன்னர், அங்கெல்லாம் வாழ்ந்தோர் தமிழராவர். அதனால்தான், அவ்வூர் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. குறிப்பாகக் குளங்களின் பெயர்கள் எல்லேம் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. தமிழர் அங்கு வாழாதிருந்திருந்தால், அங்குள்ள தமிழ்ப் பெயர்களெல்லாம் வரலாற்றில் இருந்தே மறைக்கப்பட்டு சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக, ஆங்கிலேயர் அவற்றைப் பதிவுசெய்துள்ளனர்.
இத்தரவுகளை "The Vanni Districts of the Northern Province of Ceylon” by J. P. Lewis (published 1895) பார்க்கலாம். “Manual of the North-Central Province, Ceylon" by R. W. Ievers என்னும் நூலிலும் பார்க்கலாம். அத்துடன், பிரிட்டிசார் காலத்தில், 1871-ஆம் ஆண்டு முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். அதன்பின்னர் 1881, 1891, 1901, 1953 களிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், “Census of Ceylon, 1953” என்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணத்தைப் பதிவிறக்கிப் பார்க்கலாம். அதன்பின்னர், இலங்கைச் சிங்கள அரசின் சிங்களக் குடியேற்றங்களின் பின்னர் நடந்த கணக்கெடுப்பின்படி அப்பகுதிகளில் எப்படி மக்கள் தொகை பெருகியுள்ளது என்பதையும் கணக்கிடலாம்.
இத்தரவுகள் எல்லாம் A9 நெடுஞ்சாலை திறப்புடன் தொடர்புடையது. அந்த நெடுஞ்சாலை திறந்த பின்னரே சிங்களவர் வவுனியா வரை குடியேறினர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்தோரெல்லாம் தமிழர் ஆவர். அவற்றை மறைப்பதற்காகவே A9 நெடுஞ்சாலையின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் விளங்கிகொள்ளலாம். அத்துடன், இன்று அருச்சுனா இராமநாதன், அருண் சித்தார்த் போன்றோர் நல்லூர் கோயிலின் ஒரு பகுதியில் இசுலாமியர் ஒருவரின் கல்லறை இருந்தது என்றெல்லாம் கூறுவதில் எவ்வுண்மையும் இல்லை. உண்மையில், இசுலாமியர் A9 நெடுஞ்சாலை திறப்பின் பின்னர், அதுவும் இலங்கை விடுதலையடைந்ததன் பின்னர்தான் யாழில் வணிக நோக்கில் வந்து குடியேறினர். (அதற்கு முற்பட்ட எந்த ஆவணத்திலும் ஒரு இசுலாமியர் வாழ்ந்ததற்கான எந்தத் தரவும் இல்லை.)
பி.கு.: மேலும், துல்லியமான தரவுகள் வேண்டுவோர் பிரிட்டிசார் இலங்கையை ஆட்சிப்புரிந்த காலத்து ஆவணங்களையும் நூல்களையும் தேடிப் பார்த்தால் பெற்றுக்கொள்ளலாம். அநுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற இடங்கள் மீள்-கண்டுபிடிப்புக்கு உள்ளான தரவுகளை H. C. P. Bell என்பாரின் நூல்களைப் பதிவிறக்கிப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
ச. தங்கவடிவேல், பிரான்சு


