மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்
.
நீங்கள் தமிழரசு கட்சியின் சமத்துவமான தலைவராக செயல்படுவதை விடுத்து, சுமந்திரனின் ஊதுகுழலாகவும், பாரபட்சமாகச் செயல்படுவது போல் எமக்குத் தெளிவாகத் தென்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி மீது நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை கட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றிப் பொதுவெளியில் முன்வைத்த திருமதி. சிறீ விமலேஸ்வரி அவர்கள் மீது நீங்கள் துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருந்தீர்கள்.
அதேபோல் நீங்கள் ஓர் நடுநிலைமையான, உறுதியான தலைவராக இருந்தால், முதலில் கட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி கட்சிமீது வழக்குத் தாக்கல் செய்து, பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை முடக்கி வைத்திருக்கும் திரு. பீற்றர் இளஞ்செழியன் மற்றும் திரு. சந்திரசேகரம் பரா ஆகிய இருவர் மீதும், இவர்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும். இவர்களால் முடக்கப்பட்டு செயல்பாடற்றிருக்கும் கட்சியில் யாரிடம் அனுமதிபெற வேண்டும்?
செயற்பாடற்றிருக்கும் கட்சியின் அனுமதியின்றி, பொது வேட்பாளராகக் களம் இறங்கிய திரு. அரியநேந்திரன் தொடர்பாக, தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் இரத்துசெய்யப்பட்டு, தமிழரசுக் கட்சி வழமையான இயங்கு நிலைக்கு வந்த பின்னர், இனத்தையும், கட்சியையும் உண்மையாக நேசிக்கும் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பரிசீலனைசெய்யவும்.