இடி, மின்னலில் இருந்து ஈஸியா தப்பிக்கலாம் - மொபைலில் 'இந்த APP' இருந்தா போதும் !
ஜிபிஎஸ் இருப்பிடத்தின் அடிப்படையில் 20 முதல் 40 கிலோமீட்டர் வரம்பிற்குள் மின்னல் பற்றி இந்த செயலி முன்கூட்டியே எச்சரிக்கும்.

வெட்ட வெளியில் நிற்கும் போது உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்ப்பது உடல் கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான் அறிகுறிகளாகும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையின் போது அனைவரும் பாதுக்காப்பாக இருப்பது அவசியம். குறிப்பாக, இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடிவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
அந்த வகையில், செவ்வாய்கிழமை உளுந்தூர்பேட்டையில் மழையில் நனையாமல் இருக்க மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததை உணர்த்துகிறது. அதன்படி, இடி, மின்னல் காரணமாக ஏற்படும் சேதம் மற்றும் இழப்புகளை தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
இடி, மின்னலில் இருந்து பாதுகாப்பது எப்படி?:
- இடியுடன் கூடிய மழையின் போது, பிளம்பிங் மற்றும் மின்சார வயரிங் வசதியுடன் கூடிய ஒரு பெரிய மூடப்பட்ட கட்டமைப்பிற்குள் இருப்பது பாதுகாப்பானது. உதாரணத்திற்கு, ஷாப்பிங் மால், பள்ளி, அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு போன்றவை என்கிறது National ocenic and atmospheric administration.
- எந்த காரணத்திலும், மழை நேரத்தில் மரங்களின் கீழே ஒதுங்கக்கூடாது.
- பாதுகாப்பான இடங்கள் ஏதும் அருகில் இல்லை என்றால், உயரமான பொருள்களுக்கு அருகே செல்வதை தவிர்க்கவும்.
- பேருந்து, கார் என முழுமையாக மூடப்பட்ட வாகனகளுக்குள் இருக்கும் போது இடி, மின்னல் தாக்காது.
- குழாய் போன்ற உலோக இணைப்புகள் வழியாக மின்னல் பாய்ந்து செல்லகூடியது என்பதால் மழை பெய்யும் நேரங்களில் குளிப்பது, பத்திரம் கழுவுவது போன்ற தண்ணீர் புழங்கும் வேலைகளை செய்ய வேண்டாம்.
- பாதுகாப்பற்ற கூடாரங்கள், மொட்டை மாடி, இருசக்கர வாகனம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் ஹேட் டிரையர், மின்சார பல் துலக்கிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
- மின்னல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்க மத்திய அரசு அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் 'Damini: lightining alert'. இது 2020 ஆம் ஆண்டில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் (IITM Pune) உருவாக்கப்பட்டது. இந்த செயலியின் மூலம், மின்னல் நீங்கள் இருக்கும் இடத்தைத் தாக்குமா? என்பதை அரை மணி நேரத்திற்கு முன்பே அறிந்து கொள்ளலாம்.
அதாவது, உங்கள் மொபைலில் உள்ள ஜிபிஎஸ் இருப்பிடத்தின் அடிப்படையில் 20 முதல் 40 கிலோமீட்டர் வரம்பிற்குள் மின்னல் பற்றி இந்த செயலி முன்கூட்டியே எச்சரிக்கும். அதுமட்டுமின்றி, மின்னல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த ஆப் உங்களுக்குச் சொல்கிறது.
- இடி, மின்னலின்போது கால்நடைகளை மரத்தடியில் கட்டி வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
- வெட்ட வெளியில் நிற்கும் போது உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்ப்பது உடல் கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான் அறிகுறிகளாகும். அச்சமயம் தரையில் குனிந்த நிலையில் உடனடியான அமர்ந்திட வேண்டும்.
- இடியின் போது 2 காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
- வீடுகளில் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்பதை தவிர்க்கவும்.
- வீட்டிலுள்ள ஏசி, ஃபிரிட்ஜ், மின் அடுப்பு உள்ளிட்ட மின் சாதங்களை உடனடியாக அணைத்து விட வேண்டும். மொபைல்போன் சார்ஜர் இணைப்புகாளை துண்டிக்க வேண்டும்.
- குளம், ஏரி என நீர்நிலைகள் இருக்கும் இடத்தின் அருகில் இருப்பதை தவிர்க்கவும்.