ரணில்- சஜித் இடையிலான உறவை மீள இணைக்க முயற்சி
.
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அதிலிருந்து விலகிச் சென்ற சஜித் பிரேமதாச அணியினருக்கு இடையே அவசர கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் இரு தினங்களுக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சஜித் அணியை பிரநிதித்துவப்படுத்தி லக்ஷ்மன் பொன்சேகா மற்றும் ரணில் அணியிலிருந்து சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையே தற்போது பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ள மாட்டார் என்றும், ஆனால் அவர் சார்பாக முக்கியமான பொறுப்புகளை ஏற்க மூன்று அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவின் பங்கு மர்மமாக மாறியுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், லக்ஷ்மன் பொன்சேகாவிற்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவும் அதிகளவில் பேசப்படுகின்றது.
லக்ஷ்மன் பொன்சேகா, சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக செயற்பாட்டின் முதன்மையானவராகக் கருதப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை பழைய நிலையில் உருவாக்க முயற்சிக்கும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.