பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்காக உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர்.

பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.
இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
இதுதவிர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கம் இன்றைய தினத்தை (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குறித்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியுள்ளனர்.
ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்கா அல்லது சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் அவரது திருவுடல் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியும் இன்று காலை ரோமை வந்தடைந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கிறார். அவர் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.