இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் சென்னை வருகை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலன் அனைவரும் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 2, 19, 23 ஆகிய மூன்று தேதிகளில் 3 விசைப்படகுகளில் என தனித்தனியாக மொத்தம் 11 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் பகுதியான இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படை ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகுகளைச் சுற்று வளைத்துள்ளது.
மேலும், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டிய இலங்கை கடற்படையினர், விசைப்படகில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை இலங்கை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம் ஒன்றை எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. பின்னர், தூதரக அதிகாரிகள் மீனவர்கள் அனைவரும் விமானம் மூலம் சென்னை திரும்ப ஏற்பாடுகளைச் செய்தனர்.