துப்பாக்கிச்சூடு நடத்தி சிறுவனைப் படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 'சுதந்திரமாக நடமாட்டம்'!
“மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. 17 வயது சிறுவனைப் படுகொலை செய்தது மட்டுமன்றி, அதற்காகப் பல்வேறு காரணங்களையும் நியாயங்களையும் முன்வைக்க அரச இயந்திரங்கள் முயல்கின்றன.
யுத்தம் முடிவடைந்து வருடங்களின் பின்னரும் வடக்கில் வன்முறையைப் பரப்புவதாக இராணுவம், பொலிசார் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் படைகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.
“யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன, சாதாரண பொதுமக்களோ அல்லது வேறு எவருமோ ஆயுதங்களை ஏந்தி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் இடம்பெறவில்லை. பொலிசார் மற்றும் இராணுவத்தை உள்ளடக்கிய அரச கட்டமைப்பில் உள்ள தரப்பினரே இந்த வன்முறையைப் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.” என, சட்டத்தரணி எஸ். இளங்கோவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22 பெப்ரவரி) இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை அல்லைப்பிட்டி சந்தியில் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது சிறுவனுக்காக நீதிகோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குடும்ப உறவினர்களும், சிவில் அமைப்புகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
2026 பெப்ரவரி 11 ஆம் திகதி அதிகாலை 04:00 மணிக்கு பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில், பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிசாரால் ஒரு வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஒரு வயதுவந்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“2026.02.10 அன்று அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞை காட்டியபோது, அந்த வேன் நிறுத்தப்படாமல் சென்றதால் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த வேனில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் காயமடைந்து யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.”
ஆனால், உயிரிழந்த சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயுப்ராஜ் அருள் பயாஸ் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர் என அவரது பிறப்புச் சான்றிதழிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவனான தனது மகனின் கொலைக்கு தற்போதைய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது எதிர்காலத்தில் அமையவுள்ள அரசாங்கமொன்றிடமிருந்தோ நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை எனக் கண்ணீர் மல்க கருத்துத் தெரிவித்த அருள் பயாஸின் தாயாரான அல்பினோ ஜானகி துயருறும் ஏழை மக்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைப்பதில்லை என அவர் போராட்டத்தின் போது ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
“நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, இருக்கும்போது கூட சுமையோடு இருந்த என் பிள்ளையை துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது, வெளி அரசாங்கமும் வழங்காது. காசுக்காரனுக்கு தான் எல்லாரும் ஆதரவு. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை நம்பித் தானே ஐயா இருந்தது?”
உயிரிழந்த சந்தேகநபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக அரச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக பெப்ரவரி 11 ஆம் திகதி அதிகாலை 04:00 மணிக்கு பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடலில் எந்தவித போதைப்பொருளும் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படாததால், ‘உயிரிழந்த சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக அரச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்’ என பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் திருவரங்கன் மகேந்திரன் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பொலிசாரின் காடைத்தனத்தை நியாயப்படுத்த பொலிஸார் உள்ளிட்ட ஏனைய தரப்பினர் பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருவதாகவும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் பொலிசார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து (CID) பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
“வாகனம் ஓட்டிச் சென்றபோது அதனை நிறுத்தவில்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு பொலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இன்று அந்தக் கொலையை பொலிஸாரும் ஏனைய தரப்பினரும் பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தி வருகின்றனர். இது பொலிஸாரின் அராஜகச் செயலாகும். இது பொலிசாரின் வன்முறை முகத்தை மீண்டும் ஒருமுறை எமக்குக் காட்டுகிறது. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசாரே, அந்த அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனைக் கொலை செய்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாங்கள் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறிக்கொண்டு இந்த கொலைக்கு தொடர்பில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை ஒரு பாராமுகமான போக்காகவே நாம் காண்கிறோம். இன்றும் அவரது குடும்பத்தினர் பொலிசாரினாலும் சிஐடியி பிரிவினராலும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். அந்த அழுத்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.”
தமிழ்த் தேசத்தின் ஒவ்வொரு தாயும் சித்தங்கேணி அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸின் தாயைப் போலவே கண்ணீர் வடிப்பதாக, போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவுத் தலைவி வாசுகி சுதாகரன் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
“மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறுவனுக்கு 17 வயது. இந்த சிறுவனைப் படுகொலை செய்தது மட்டுமன்றி, அதற்காகப் பல்வேறு காரணங்களையும் நியாயங்களையும் முன்வைக்க அரச இயந்திரங்கள் முயல்கின்றன. உண்மையில் இந்த 17 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பான அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த குடும்பத்தின் வலியைப் பார்க்கும்போது, தமிழ்த் தேசத்தின் ஒவ்வொரு தாயும் இதேபோன்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாறான அநீதிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. போதைப்பொருள் பாவனையைப் பரப்பிவிட்டு, பின்னர் அது பற்றிப் பல்வேறு காரணங்களைக் கூறி மௌனமாக இருக்கும் அரச இயந்திரங்கள், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களைச் சுட்டுக் கொலை செய்கின்றன.”
சிறுவனின் படுகொலை நிகழ்ந்து இரண்டு வாரங்கள் கடந்தும் கொலையாளிகள் கைது செய்யப்படாதது குறித்துக் கடும் கேள்வியெழுப்பிய அவர், அனைத்துக் கொலையாளிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டு வடக்கு கிழக்கில் வாழும் தமிழினப் பிள்ளைகள், தமிழினப் பெண்கள் மற்றும் தமிழினக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
"அரசாங்கத்தில், உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் இந்த பிள்ளை இறந்து இரண்டு கிழமைகள் முடிவுற்றுவிட்டது. ஆனால் இந்தச் சிறுவனுக்கான நீதியோ அல்லது அதைக் கொன்றவரை இதுவரை கைது செய்த நிகழ்வுகளோ எதுவுமே நடைபெறவில்லை என்பது மிக மனவருத்தத்திற்குரியது. அடிப்படை மனித உரிமையையும் இந்த இலங்கை அரசு மீறியிருக்கிறது. குற்றம் எங்கே இழைக்கப்படுகிறதோ, அந்த அரசின் குற்றத்தை முதலில் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிர்வாகத்திலே தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கின்ற அனைவரும் தண்டிக்கப்பட்டு, இந்தப் பிள்ளை போன்று வடக்கு கிழக்கு தேசமெங்கும் இருக்கும் எங்களுடைய தமிழினப் பிள்ளைகளும், தமிழினப் பெண்களும், தமிழினச் சிறுவர்களும், தமிழினக் குடும்பங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்."
விசேட சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரன் நீதவான் எம்.என்.என். ஹுசைனுக்கு 2026 பெப்ரவரி 10ஆம் திகதியன்று அனுப்பிய பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது அல்பினோ அருள் பயாஸின் மரணத்திற்கான காரணம் ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவினால் மூளை சிதைவடைந்தமை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


