“பொருளாதார ஸ்திரத்தன்மையே எனது முதன்மையான முன்னுரிமை”
.
பொருளாதார ஸ்திரத்தன்மையை தனது முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இலங்கையின் புதிய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது வெற்றி மக்களின் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“மக்கள் நீண்டகாலமாக மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும், தனது வெற்றியின் மூலம் அது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்காக வர்த்தக சமூகத்தினரின் உதவியை நாடியதாகவும் ஜனாதிபதி தெரிவத்துள்ளார்.
இந்த முயற்சியில் வெளிநாடுகள் எமக்கு உதவுமென நாங்கள் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகினால் அமைச்சரவை தானாகவே கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நடந்தால் ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்க நான்கு புதிய அமைச்சர்களை நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொது தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை 15 இலாகாக்கள் சமமாகப் பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.