அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு
.
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கீழுள்ள விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டின் பின்னரான, வீழ்ச்சி பாதையில் இருந்து மீண்டெழும் நம் கட்சியின் தொடர் நடவடிக்கைகளில் பலர் உள்ளே வருவதும், வெளியே போவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு வெளிப்படையான நிகழ்வு.
இவை யாவுமே தேசத்தையும், மக்களையும் நேசிக்காத சுயநல பண்பு கொண்ட நபர்கள் தம்மை தலைவர்களாகவும், அரசியல் சாணக்கியர்களாகவும் வெளிப்படுத்த முனைந்தவையே இதற்கு முழுமையான காரணியாகும். எனவே இவர்களது வெளியேற்றமோ, அல்லது அறத்திற்கு புறம்பான செயற்பாடுகளோ எமது கட்சியை சீரழிக்காது.
இவ்வாறான ஒரு நிகழ்வுப் போக்கில் யு.ஏ.ஆ. அருண் தம்பி முத்து தலைவராக நியமிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களில் பாரம்பரியமான இக்கட்சியை புனருத்தாரணம் செய்யவோ அல்லது அடுத்த கட்ட வளர்ச்சி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்லவோ எந்த விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காத நிலையில் கட்சியின் கொள்கைகள் விதிமுறைகளுக்கு முரணாக, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்து செய்யற்பட்டமை, மத்திய குழுவினரோடு அல்லது ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்ககளுடன் எந்தவித ஆலோசனைகளை கலந்து ஆலோசிக்காமல் சில செயற்பாடுகளை மேற்கொண்டமை, கடந்து பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் நியமனத்தில், தன்னிச்சையாக கட்சிக்கு முரணாக செயல்பட்டமையால் கௌரவ செயலாளர் நாயகம் அவர்களால் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன், உள்ளக விசாரணைக்கும் மத்திய குழுவின் ஊடாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலைமையில் தன் மீது எழும் குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கும் விசாரணையை திசை திருப்பவும் கற்பனையானதொரு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுடன் டிசம்பர்-01-2024 அன்று தமிழர் விடுதலை கூட்டணி தலைமைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சுமத்தியுள்ளார்.
- தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னரான தனது செயற்பாடுகளை வெளிப்படையாக கட்சிக்கு அறிவிக்க தவறியமை
- எனது ஏற்பை அல்லது சம்மதத்தை பெற்றுக் கொள்ளாது என்னை அவர் நியமித்த குழவில் இணைத்து கொண்டமை
- கட்சியின் உள்ளக நிலமைகளுக்கு, மூன்றாம் தரப்பினரையும், சட்ட ஒழுங்குத் திணைக்களம் போன்றவற்றையும் ஈடுபடுத்தக் கோரியமை.
- மத்திய குழுவிலோ அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இவ்விடயங்களை கலந்து ஆலோசிக்காமை.
இவரது செயற்பாடுகளுக்காக மத்திய குழுவின் ஊடாக உள்ளக விசாரணை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதையும் நான் இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறேன்.
மேற்படி அருண் தம்பி முத்து அவர்களின் செயற்பாடுகளில், உப தலைவரான எனக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை என்பதை வெளிப்படையாக தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.