ஜனாதிபதித் தேர்தல்: எப்படி வாக்களிக்க வேண்டும்?
.
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்ய இலங்கை மக்கள் தயாராகிவிட்டனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களும் ஏனைய வேட்பாளர்களும் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வேட்பாளர்கள் மாத்திரமே பிரதானமாக போட்டி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரில் ஒருவரே ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ளதாக வெளியாகும் அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் தெரிவிக்கப்படுகிறது.
மூவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், 1978ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களே போட்டியிட்டிருந்தனர். மூன்றாவதாக பிரதான வேட்பாளர் ஒருவர் உதயமாகுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே இருந்ததுடன், மக்களின் மனநிலையையும் இரண்டு பிரதான வேட்பாளர்களை நோக்கியே இருந்தது.
ஆனால், இம்முறை மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டியில் இருக்கின்றனர். மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதுடன், எந்தவொரு வேட்பாளராலும் 50 வீத வாக்குகளை கடக்க முடியாத சூழல் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மூன்றாவது விருப்ப வாக்கை அளிக்கும் முறையை தேர்தல்கள் ஆணைக்குழு பிரபல்யப்படுத்தி வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்று விருப்ப வாக்குகளை அளிக்கும் முறை 1978ஆம் ஆண்டுமுதல் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ள போதிலும் அது தொடர்பான தேவை ஏற்பட்டாமையால் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் இருக்கவில்லை.
விருப்ப வாக்கு குறித்து வாக்காளர்கள் தேடல்
இலங்கையை பொருத்தமட்டில் கடந்த காலத்தில் இரண்டு பிரதான வேட்பாளர்களே ஜனாதிபதித் தேர்தலில் களங்கண்டிருந்ததால் விருப்ப வாக்குகள் அளிக்கப்படும் முறைமை பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்திருந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை.
புள்ளிடியை இட்டு தமது வாக்குகளை மக்கள் அளித்து வந்ததால் விருப்ப வாக்கு அளிக்கும் முறை பற்றிய அனுபவம் மக்களிடம் இல்லை. ஆனால், இம்முறை பல பிரபல்யமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் விருப்ப வாக்குகளை சரியாக அளிக்கும் முறை பற்றிய தெளிவை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கி வருதுடன், வாக்காளர்களும் அதுகுறித்த தேடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
விருப்ப வாக்குகளை வாக்காளர்கள் அளிக்கும் போது புள்ளடிக்கு பதிலாக 1, 2 , 3 என தாம் விரும்பு மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்.
1 ஆவது இலக்கத்தை இடும் நபருக்கு வாக்காளரின் முதல் வாக்குச் செல்லும். 2, 3 ஆம் இலக்கங்களையிடும் வாக்குகள் 50 வீதத்தை வேட்பாளர்கள் எவரும் எட்டாத சந்தர்ப்பத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெறும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பதற்காக கணக்கிடப்படும்.
1 என்ற இலக்கத்தை மாத்திரம் வழங்கி வாக்காளர் தமது வாக்கை அளிக்கவும் முடியும். அல்லது 1, 2ஆம் இலக்கங்களை வழங்கியும் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
ஆனால், 1 என்ற இலக்கத்தை இட்டுவிட்டு இரண்டாவது, மூன்றாவது வேட்பாளர்களுக்கு புள்ளிடியை இட முடியாது. அவ்வாறு அளித்தால் அது செல்லுபடியற்ற வாக்காக கணக்கிடப்படும்.
என்றாலும், கடந்த காலத்தில் வாக்களர்கள் தமது வாக்குகளை புள்ளடி மூலம் வழங்கியது போன்று ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் அவருக்கு புள்ளடியை இடவும் முடியும்.
வாக்குளிக்கும் முறை பற்றி தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை கீழ் இணைக்கப்பட்டுள்ளது.