தமிழ்த் தேசியத்தை விட்டு தமிழ் மக்கள் விலகவில்லை
.
இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மூன்று ஆசனங்களுக்கான வாக்குகளையும் எடுத்து நோக்கினால் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் கிடைத்த வாக்குகளையும் விடக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. எனவே தமிழ்மக்கள் தமிழ்த்தேசியத்தை விட்டு விலகியதாகவோ, தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கின்ற தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவு வாக்குகளை அளித்துள்ளதாகவோ கூறப்படும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கியில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அதேவேளை, தமிழ்த்தேசிய வாக்குகளை நோக்கும் போது கடந்த பாராளுமன்றத் தேர்தலை விடச் சற்றுக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. அதற்குப் பிரதான காரணம் கணிசமானளவு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகக் காணப்படுவதுடன் தமிழ்த்தேசியக் கட்சிகளிடமிருந்து வாக்குகள் பிரிந்து தமிழ்த்தேசியத்தைக் கோட்பாடு ரீதியாகப் பேசிய சுயேட்சைக் குழுக்களுக்கும், வேறு கட்சிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் நாங்கள் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்படாததும், மற்றது நாங்கள் ஆக இறுக்கம் என்பதும் ஆகும். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எங்கள் அணுகுமுறை சார்ந்ததாக இருந்ததேயன்றி கொள்கை சார்ந்ததாக அல்ல. தமிழ்மக்கள் பாதிக்கப்படுகின்ற போதும், வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற போதும் எமது உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
அதுமாத்திரமல்லாமல் மக்கள் நேரடியாகச் செயற்பட முடியாத இடங்களில் கூட நாங்கள் தலையிட்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளோம்.
மக்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கான மனிதாபிமான, நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் கல்விசார்ந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்குதல் என்பன வேறு எந்தக் கட்சிகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத பணிகளாகக் காணப்படுகின்றன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது நேரடியான விமர்சனங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்ற போதிலும் எங்கள் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பிலான ஆழமான ஆய்வுகளை நாங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக மேற்கொள்வதுடன் எங்கள் தரப்பிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இந்தத் தடவை எமக்கு வாக்களித்தமையைத் தவிர்த்து வேறு தரப்பினருக்கு வாக்களித்தவர்கள் அவர்கள் விரும்பினால் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொண்டு தமது.விமர்சனங்கள், கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.
செயற்பாட்டு ரீதியாகத் தமிழ்மக்கள் மத்தியில் நாங்கள் பல்வேறு நிலைகளிலும் செயற்பட்டு வந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலின் சமகாலப் போக்கு, அதிலுள்ள சவால்கள், எந்தவகையில் தமிழ்த்தேசிய அரசியலை அணுக வேண்டும்என்பன போன்ற விடயங்களைத் தமிழ்மக்கள் மத்தியில் சரியாகச் செய்யவில்லை என்ற குறையை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். தமிழ்மக்களை அரசியல் மயமாக்கும் செயற்பாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகச் செய்யத் தவறியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதனை நாங்கள் எதிர்காலத்தில் நிவர்த்திக்க நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.