ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா: பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில்!
.
இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள் வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடுமையான போராட்டங்களால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தார்.
இதனால் இம்முறை மக்களின் மனநிலை பற்றிய தெளிவான கருத்துகளை எவராலும் முன்வைக்க முடியாதுள்ளது. நாட்டில் பாரிய மாற்றமென்று அவசியம் என்பதையே அனைத்தின மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் வேட்பாளராக பரந்தப்பட்ட கூட்டணியொன்றின் ஊடாக களமிறங்க உள்ளார்.
என்றாலும், இன்னமும் ஐ.தே.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சுகள் இறுதிப்படுத்தப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதனை அக்கட்சிகள் நாட்டு மக்களுக்கும் அறிவித்துவிட்டன.
இந்த நிலையில் பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர சர்வஜன அதிகாரம் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அதேபோன்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அதற்கு பொதுஜன பெரமுன இணங்க வேண்டும்.
சு.கவின் வேட்பாளராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சு,கவின் அதிகாரம் தற்போது அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தரப்பிடம் உள்ளது.
அதேபோன்று காலிமுகத்திடல் போராட்ட குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ள “மக்கள் போராட்ட முன்னணி“யின் வேட்பாளராக சரத் பென்சேகா களமிறக்கப்பட அறிய முடிகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.