ஐ.நா பொது சபையில் தீர்மானம்! இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.
.
இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 124 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன, மேலும் இந்தியா, இஸ்ரேல் உட்பட 43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாமல் வெறும் பார்வையாளராக மட்டுமுள்ள பாலத்தீனத்தால் இதில் வாக்களிக்க முடியாது.
சர்வதேச சட்டத்திற்கு எதிராக மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரத்துள்ளது என்று ஐ.நா-வின் உச்ச நீதிமன்றம் ஜூலை மாதமன்று கருத்து தெரிவித்தது. அதன் அடிப்படையிலே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, “சுதந்திரம் மற்றும் நீதிக்கான பாலத்தீனத்தின் போராட்டத்தில்” ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று பாலத்தீன தூதரக அதிகாரி கூறினார். ஆனால் இதனை “ராஜ்ஜிய பயங்கரவாதம்” எனக்கூறி இஸ்ரேல் தூதரக அதிகாரி கண்டனம் தெரிவித்தார்.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற விதி இல்லையென்றாலும், இது ஐநா-வின் அனைத்து 193 உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடு ஆகும். மேலும் இது அரசியல் பலத்தை கொண்டவையாக உள்ளது.
இந்தியா புறக்கணித்தது ஏன்?
இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளில் வாக்களிக்காமல் புறக்கணித்த ஒரே நாடு இந்தியா மட்டும்தான்.
சர்வதேச விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் கூற்றுபடி, நேபாளத்தை தவிர்த்து தெற்காசியாவில் இந்தியா மட்டுமே வாக்களிப்பை புறக்கணித்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பர்வதனேனி ஹரீஷ் கூறுகையில், “இந்த மோதலை 11 மாதங்களாக உலகமே கவனித்து வருகிறது.
இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். இந்த மோதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம். உடனடியாக போர் நிறுத்தம் செய்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.”என்றார்.
தீர்மானத்துக்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பது குறித்து பர்வதனேனி ஹரீஷ் கூறுகையில், “இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கு பெறவில்லை.
நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய உறவை மூலமான தீர்வை கோரி வருகிறோம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேறு வழியில்லை என்று நம்புகிறோம். இந்த மோதலில் யாருமே வெற்றியாளர் இல்லை.” என்றார்
ஐக்கிய நாடுகள் சபையில் அவர் ஆற்றிய உரையில், “இரு தரப்பையும் சமாதானமாக, நெருக்கமாக கொண்டு வருவதே எங்களது நோக்கம். நமது கூட்டு முயற்சி அதற்காக தான் இருக்க வேண்டும். நாம் அவர்கள் ஒன்றுபடுவதற்கு பாடுபட வேண்டும், பிளவுபடாமல் இருக்க வழிவகுக்க வேண்டும்” என்று கூறினார்.
பர்வதனேனி ஹரீஷ்
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தது. இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் காஸாவில் இஸ்ரேல் போரை தொடங்கியது
போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போர் தொடங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில், 680 பாலத்தீனர்கள் மற்றும் 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கூறியுள்ளது.
“பாலத்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது. மேலும் இங்கிருந்து இஸ்ரேல் முடிந்தவரை விரைவாக வெளியேற வேண்டும்”, என்று ஐநா-வின் சர்வதேச நீதிமன்றத்தின் 15 பேர் கொண்ட நீதிபதிகள் குழு கருத்து தெரிவித்தது.
“ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில், இஸ்ரேலில் இருந்து குடியேறியவர்கள் அனைவரையும் வெளியேற வேண்டும் மற்றும் அவர்கள் அங்கு செய்த சேதத்திற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இழப்பீடு வழங்க வேண்டும்”, என்றும் சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதனையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை
1967-ஆம் ஆண்டில் இருந்து, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் சுமார் 7 லட்சம் யூதர்கள் வசிக்கும், சுமார் 160 குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த குடியேற்றங்கள் “சர்வதேச சட்டத்திற்கு புறம்பானவை” என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதற்காக இஸ்ரேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
“சர்வதேச நீதிமன்றம் ‘பொய்யான முடிவுகளை’ எடுத்துள்ளன. தங்களது சொந்த இடத்தில் யூத மக்கள் இருப்பது ஒரு ஆக்கிரமிப்பு இல்லை”, என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை அன்று ஐநா பொது சபை சர்வதேச நீதிமன்றத்தின் இந்த கருத்தை வரவேற்றது.
“இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளுக்கும் இஸ்ரேல் தாமதமின்றி இணங்க வேண்டும் என்றும்” ஐ.நா திர்மானம் கோருகிறது
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாலத்தீன ஆதரவான அதிகாரிகள் ஐநா பொதுசபையில் கொண்டாடினர்.
இது குறித்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் கூறுவது என்ன?
“பாலத்தீனத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம்”, என்று மேற்குக் கரையை சேர்ந்த பாலத்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது.
“இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற வேண்டும் மற்றும் அதன் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்பதற்கு ஆதரவாக ஐ.நா. உறுப்பு நாடுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இருப்பது உலகளாவிய ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது.
மேலும் தற்போது பாலத்தீன மக்களிடம் இருந்து பறிக்கமுடியாத சுய ஆட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
“இது உண்மைக்கு புறம்பான, பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அமைதியை சீர்குலைக்க வழிவகுக்கும் ஒரு முடிவு” என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் “ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு வலு சேர்க்கும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு பலனளிப்பதாகவும் இந்த தீர்மானம் உள்ளது. பாலத்தீன அதிகாரிகள் போரை நிறுத்துவதற்காக அல்லாமல் இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கவே ஒரு பிரசாரத்தை நடத்துகிறது” என்றும் அது குற்றம் சாட்டியது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.
“இன்று இந்த தீர்மானத்தின் மூலம் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்த தீர்மானம் பாலத்தீனர்களின் உயிரைக் காப்பாற்றாது, பணயக்கைதிகளை மீட்க உதவாது, இஸ்ரேல் அங்கு குடியேறுவதை முடிவுக்கு கொண்டு வார முடியாது. அமைதியை நிலைநாட்ட வழி வகுக்காது”, என்று அமெரிக்க தூதரக அதிகாரி லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.