சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்?: இரண்டு பேர் கடும் போட்டி
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ள லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு இடையில் இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.
ரஞ்சித் மத்துமபண்டார இந்தப் போட்டியில் முன்னணியில் இருப்பதாக தெரியவருவதுடன், பிரதமராக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க வேண்டுமென மொனராகலை மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறுதி முடிவை எடுக்காததால் நாளைய தினம் கூட்டணி ஒப்பந்தத்தில் அக்கட்சி கைச்சாத்திடாதென தெரியவருகிறது.