தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு! - 'போர்வை உறைகளில் தமிழ்'
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழி தொடர்பான மோதல்.

ஏசி பெட்டியில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை உறைகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சடித்து வழங்க மதுரை ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் உள்ள குளிர் சாதனப் (AC) பெட்டிகளில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை உறைகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என 3 மொழிகளில் அச்சடித்து வழங்க மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழி தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. மும்மொழியை ஏற்கப்போவதில்லை என தமிழ்நாடு அரசும், மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வித்துறைக்கான ரூ.2156 கோடியை வழங்க முடியாது என்று மத்திய அரசும் கூறி வருகிறது.
ஆனால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக்கொள்கையே எப்போதும் போல் நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், மதுரைக் கோட்டத்துக்கு உட்பட்ட 13 ரயில்களில் உள்ள குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ரயில் பயணிகளின் வசதிக்காக பேப்பர் கவருடன் கூடிய துவைத்து, நேர்த்தியாக மடிக்கப்பட்ட போர்வைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அந்த உறையில் 'நல்வரவு / மதுரை கோட்டம் / தங்களது பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் / இந்த உறையில் இரண்டு துவைத்த படுக்கை விரிப்புகள் மற்றும் ஒரு கை துண்டு உள்ளது. துணியின் தரத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் அதற்கு பதிலாக வேறு ஒன்றை உதவியாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் / ஏதேனும் புகார்கள் இருந்தால் 9003862420-ஐ அழைக்கவும்' என தமிழிலும், இதே பொருளுடன் அடுத்தடுத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
