ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி இழைத்துள்ள மாபெரும் தவறுக்கு நான் உடந்தை இல்லை – பிரத்தியேக செவ்வியில் சிறிதரன்
.
சகல ஜனாதிபதி வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்கள் கட்சியின் சிறப்புக்குழுவினால் ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே இம்முறை எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானம் மத்திய குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
இருப்பினும் அவ்வாறு செயற்படாதது கட்சியின் மாபெரும் தவறாகும். நானும் அதற்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை.
எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்பதையும் தமிழ் மக்களின் வாக்குகள் ஊடாக சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் நோக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கேள்வி – பழமையான தமிழ்த்தேசிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்துப் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ஏன் இந்தக் குழப்பம்?
பதில் – இலங்கைத் தமிழரசுக்கட்சி என்பது உச்சபட்ச ஜனநாயகத்தன்மை கொண்ட கட்சியாகும்.
கட்சியின் மத்திய செயற்குழுவில் இருப்பவர் கட்சிக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துவிட்டு, அவர் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்கிறார். நானறிந்தவரை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் கட்சியின் உச்சபட்ச ஜனநாயகத்தன்மையைக் காண்பிக்கிறது என்றே நாங்கள் கருதவேண்டியிருக்கிறது.
அதேபோன்று கட்சி என்ற ரீதியில் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தவறான முடிவுகளால் மக்கள் பெரிதும் விரக்தியடைந்திருக்கிறார்கள்.
மக்கள் எம்மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். அந்த விரக்தியும், கோபமும் இன்று மக்களைப் புதியதொரு தெரிவை நோக்கித் தள்ளியிருக்கிறது. அதன்விளைவாக ஏற்பட்ட அழுத்தமே ‘தமிழ் பொதுவேட்பாளர்’ என்ற வடிகாலைத் திறந்துவிட்டிருக்கிறது.
இதன்மூலம் தமது அபிலாஷைகளையும், எதிர்காலக் கனவுகளையும் ஈடேற்றிக்கொள்வதற்கான ஒரு பாதையாகத் தமிழ் மக்கள் அதனைத் தெரிவுசெய்திருக்கிறார்கள்.
அவ்வாறிருக்கையில் மக்களின் முடிவுக்கு எதிராக தமிழரசுக்கட்சி தீர்மானமொன்றை எடுக்கிறபோது அது கட்சியின் உள்ளக மோதல்களைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்துகின்ற போக்கு வலுவடைவதற்கும் காரணமாகியிருக்கிறது.
எனவே தமிழ் மக்களின் பக்கம் நின்று, அவர்களின் எண்ணவோட்டங்களின் அடிப்படையில் சிந்திக்கக்கூடிய தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தமிழ் பொதுவேட்பாளர் பக்கம் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறார்கள்.
அது யதார்த்தபூர்வமானதும், காலத்துக்கு ஏற்றவாறானதுமான முயற்சியாக அமைந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
கேள்வி – அவ்வாறெனில் செப்டெம்பர் முதலாம் திகதி கூடிய தமிழரசுக்கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் தவறென்று கூறுகிறீர்களா?
பதில் – கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி எமது மத்திய குழு வவுனியாவில் கூடியபோது அறுவர் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன் ஆகியோருடன் நானும் அந்தக் குழுவில் உள்ளடங்குகின்றேன்.
தென்பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடு, அவற்றை நன்கு ஆராய்ந்து, அவற்றில் எந்த வேட்பாளர் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றாரோ அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலனை செய்வதே இந்தக் குழுவின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
இருப்பினும் அந்த சிறப்புக்குழு கூடாமல், எவ்வித ஆலோசனைக்கூட்டங்களையும் நடத்தாமல், மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், யோகேஸ்வரன் உள்ளிட்டோரின் பங்கேற்பின்றி, ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு, கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் ஆகியோரிடம் உரிய முறைப்படி அனுமதிபெற்று நானும் பிரிட்டனுக்குச் சென்றதன் பின்னர் அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகத் துரதிஷ்டவசமானதொரு முடிவாகும்.
ஏனெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்குத் தீர்மானம் எடுத்தபோது தபால்மூல வாக்களிப்பு நிறைவடைந்திருந்தது.
அதன் பின்னர் தான் நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்தோம். ஆகவே இம்முறையும் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி கட்சிக்குள் தீர்க்கமாக ஆராய்ந்ததன் பின்னர், சகல உறுப்பினர்களினதும் ஒப்புதலுடன் 18 ஆம் திகதிக்கு முன்னர் கூட எமது தீர்மானம் என்னவென்று மக்களுக்கு அறிவித்திருக்கமுடியும்.
ஆனால் அதற்கு மாறாக அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு எமது கட்சியின் எதிர்காலத்தைப் பாதித்திருப்பதுடன், எமது மக்களையும் எம்மீது கோபம்கொள்ள வைத்திருக்கிறது.
எனவே அந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அத்தோடு ஆரம்பத்திலிருந்தே நான் பொதுவேட்பாளருக்கான எனது ஆதரவினை வெளிப்படுத்திவந்தேன்.
குறிப்பாக எமது கட்சியின் சுமார் 5 மத்திய குழுக்கூட்டங்களில் பொதுவேட்பாளர் ஏன் அவசியம்? அவரை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்பது பற்றி நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே எம்முடைய இந்த நிலைப்பாடுகளுக்கு மாறாக ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது கட்சியைப் பாதிக்கும் என்பதே என்னுடைய கருத்தாகும்.
கேள்வி – ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென கட்சியின் மத்திய குழு கூடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பதாகவே, கடந்த மாத இறுதியில் நீங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருந்தீர்கள் எனில், நீங்களும் கட்சியின் ஒப்புதலின்றி, சகல விஞ்ஞாபனங்களையும் ஆராயவேண்டும் என்ற கட்சியின் இணக்கப்பாட்டை மீறி செயற்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?
பதில் – நான் ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பொதுவேட்பாளருக்கு என்னுடைய ஆதரவை வெளிப்படுத்திவந்திருக்கிறேன். தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக பொதுவேட்பாளர் என்ற சிந்தனை கருத்துருவாக்கம் பெற்றபோதே நான் அதற்கு ஆதரவான எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவந்திருக்கிறேன்.
எனவே பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானம் சடுதியாகவோ அல்லது கட்சியை மீறியோ எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.
மாறாக உரிய காரண காரியங்களோடு, கட்சியின் நலன்கருதி, எமது மக்களின் கடந்தகால போராட்ட வரலாற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை கட்சி உறுப்பினர்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தேன்.
பொதுவேட்பாளர் அரியநேத்திரன் என்னுடைய வீடுதேடி வந்தபோது, நான் அவருக்கு என்னுடைய வாழ்த்தினையும், பூரண ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தேன். அது என்னுடைய மிகத்தெளிவான முடிவு என்பதுடன், அதனை நான் கட்சிக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.
கேள்வி – வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு, சஜித்தை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை கடந்த முதலாம் திகதி அறிவித்ததன் பின்னர், கடந்த வாரம் 10 ஆம் திகதி தான் முதன்முறையாகக் கூடியது. இது ஒரு பழம்பெரும் கட்சிக்கு ஏற்புடைய செயலா?
பதில் – இதனைக் கட்சியின் தவறாகத்தான் நான் கருதுகிறேன். இந்த சிறப்புக்குழு கூடுவதற்கு முன்பதாக சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை எடுத்தது தவறென்று நான் 10 ஆம் திகதி எமது குழு கூடியபோதும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இருப்பினும் போதிய கால அவகாசம் இல்லாததன் காரணமாகவே அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர்கள் கூறினார்கள்.
ஆனால் காலம் போதாதெனில் குறைந்தபட்சம் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாகவோ அல்லது வட்சப் வழியாகவோ நாம் அறுவரும் இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கலாம்.
அதனைச் செய்யாமல் தீர்மானத்தை அறிவித்தது மாபெரும் தவறு. இது கட்சியில் மத்திய குழுவில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துத் தீர்மானங்களும் தவறானவை என்ற அர்த்தப்பாட்டைத் தோற்றுவித்துவிடும். இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் 16 ஆம் திகதி எமது சிறப்புக்குழு கூடிய சில முடிவுகளை எடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறோம்.
கேள்வி – அவ்வாறெனில், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா?
பதில் – ஏற்கனவே மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது அப்போது அதிலிருந்தவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானமேயாகும்.
மத்திய குழு மீண்டும் 14 ஆம் திகதி கூடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டிருக்கிறது. ஏனெனில் அதற்கு முன்னர் சிறப்புக்குழு கூடி சில தீர்மானங்களை எடுத்ததன் பின்னர் மத்தியகுழு கூடுவதே பொருத்தமானதாக இருக்குமெனக் கருதினோம்.
எது எவ்வாறிருப்பினும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற எனது நிலைப்பாட்டின் நான் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தமட்டில் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கு சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனூடாக சகல விஞ்ஞாபனங்களும் ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
இருப்பினும் அவ்வாறு செயற்படாதது கட்சியின் மாபெரும் தவறாகும். அதற்கு நானும் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.
ஆகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்பதையும் தமிழ் மக்களின் வாக்குகள் ஊடாக சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் நோக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளரின் வெற்றிக்காக நான் தொடர்ந்து பிரசாரம் செய்வேன்.
கேள்வி – உங்களுடைய பிரசாரங்களின்போது மக்கள் மத்தியில் பொதுவேட்பாளருக்கான ஆதரவு எவ்வாறிருக்கிறது?
பதில் – உண்மையில் அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டபோது, அதுபற்றி தமிழ் மக்களிடத்தில் நிலவிய விளக்கமின்மைகள், குழப்பங்கள் என்பன இப்போது நிவர்த்தியாகி, ஒரு தெளிவு பிறந்திருக்கிறது.
மக்கள் உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். நேர்மைத்தன்மையுடன் வாக்களிப்பதற்குத் தயாராகிறார்கள். தமிழர்களின் குறியீடான சங்குச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான களநிலைவரம்.
கேள்வி – பொதுவேட்பாளருக்கு எதிர்பார்க்கப்படும் வாக்குகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் தென்னிலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் கடத்தப்படக்கூடிய ‘நேர்மறை’ செய்தி, எதிர்பார்க்கப்படும் வாக்குகள் கிடைக்கப்பெறாவிடின் ‘எதிர்மறை’யாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மூத்த அரசியல்வாதியான உங்களிடம் அதுபற்றி முன்னெதிர்வுகூறல் உண்டா?
பதில் – தமிழ் பொதுக்கட்டமைப்பின் ஊடாக பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கும் அரியநேத்திரன், எதிர்பார்க்கப்படுவதைவிடக் குறைவாக வாக்குகளைப்பெறும் நிலை ஏற்படாது.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் ஒரு தமிழராக குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது, அவருக்கு ஏராளமான தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.
இருப்பினும் கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவருக்குக் குறைந்தளவிலான வாக்குகளே கிடைக்கப்பெற்றன. இருப்பினும் அவர் ஒரு தனிமனிதனாகவே போட்டியிட்டார். ஆனால் இப்போது அரியநேத்திரன் தானாகக் களமிறங்கவில்லை.
மாறாக பெரும் எண்ணிக்கையான பொது அமைப்புக்களும், மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் இணைந்துதான் அரியநேத்திரனைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கி, இந்தக் களப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வளவு காலமும் பல்வேறு துன்பங்களையும், இன்னல்களையும் அனுபவித்துவந்த தமிழ்மக்கள், இம்முறை ஒரு புதிய களத்தைத் தேடியிருக்கிறார்கள்.
எனவே இது வாக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் விடயம் அல்ல. தமிழ் பொதுவேட்பாளர் குறைந்த வாக்குகளைப் பெற்றாலும்கூட, எப்படியிருந்தாலும் சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போகிறார்.
அவர் அடுத்த 5 வருடங்களில் தமிழர்களுக்கான எவ்வித தீர்வையும் வழங்காமல், முன்னைய அரசாங்கங்களைப்போன்று தொடர்ந்து ஏமாற்றிவந்தால், அடுத்துவரும் ஜனாதிபதித்தேர்தல்களில் தமிழ்மக்கள் தாமாக ஒன்றுசேர்ந்து ஒரு வலுவான செய்தியை சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்வதற்கான களத்தின் ஆரம்பமே இது. எனவே இதனை நாம் ஒரு முடிவாகக் கருதவில்லை.
கேள்வி – அவ்வாறெனில் எதிர்வரும் அனைத்து ஜனாதிபதித்தேர்தல்களிலும் தமிழர்கள் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவாரா?
பதில் – அதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் தேசிய அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படாவிடின், சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படாவிடின், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல்களில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான களம் இப்போதே தயாராகியிருக்கிறது.
சம்பந்தன் ஐயா உயிருடன் இருந்தபோது தமிழர்களுக்கான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், அவர்களது சுயாட்சியை மீட்டெடுக்கக்கூடிய அரசியல் தீர்வை வழங்குமாறு தொடர்ச்சியாகக் கோரிவந்திருக்கிறார்.
சிங்களத்தலைவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களை மண்டேலாவாக்கி, தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை கரிசனையுடன் முன்வைத்துவந்தவர் சம்பந்தன் ஐயா.
ஆனால் அந்த மூத்த அரசியல் தலைவருடைய எண்ணங்களை, அவருடைய தூரநோக்கு சிந்தனையை சரிவரப் புரிந்துகொள்ளாத சிங்களத்தலைமைகள், அதற்கான அறுவடையைத் தற்போது பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.
கேள்வி – இருப்பினும் அதே சம்பந்தன் ஐயா தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதென்பது தமிழர்களைப் பின்னடையச்செய்யும் முயற்சியாகவே அமையும் எனக் கூறியிருந்தார். இவ்விடயத்தில் அவர் கொண்டிருந்த தூரநோக்கு சிந்தனை பற்றி நீங்கள் அவதானம் செலுத்தவில்லையா?
பதில் – பொதுவேட்பாளர் நகர்வு ஒஸ்லோ உடன்படிக்கையை சிலவேளைகளில் பாதிக்கக்கூடும் என்றுதான் சம்பந்தன் ஐயா தெளிவாகக் கூறியிருந்தார்.
தமிழர்கள் ஒரு தேசமாக, வட-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்விக நிலமாக அங்கீகரிக்கப்பட்டு, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்மொழியவேண்டும் என்ற கோரிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு வழிகோலும் ஒரு களமாகவே ஒஸ்லோ உடன்படிக்கை எட்டப்பட்டது.
ஆனால் அந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்களை தென்பகுதியின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் முன்வைக்கவில்லையே!
ஒஸ்லோ உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இணைந்த வட, கிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்கத்தயார் என்று தென்னிலங்கை வேட்பாளர்கள் எவரேனும் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தால், நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்போம். இருப்பினும் அந்த உத்தரவாதத்தை எந்தவொரு சிங்கள வேட்பாளரும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
கேள்வி – நீங்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறீர்கள். தமிழரசுக்கட்சியின் பிறிதொரு தரப்பு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கிறது. வழமையாக அரசாங்கத்துடன் பயணிக்கும் வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன. இவையனைத்தும் இம்முறை யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற குழப்பத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதா?
பதில் – ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளருக்காக மக்களிடம் சென்று வாக்கு கேட்பார்கள். அது அவர்களின் ஜனநாயக உரிமை.
இருப்பினும் மக்கள் தானே தீர்மானம் மேற்கொள்ளும் நீதிபதிகள். கடந்த தேர்தல்களில் அவர்கள் சரியாகத் தீர்மானம் மேற்கொண்டார்கள் அல்லவா? நீங்கள் ஏன் மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு சென்று தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
கேள்வி – ஆனால் போருக்குப் பின்னரான ஜனாதிபதித்தேர்தல்களில் இருவரே பிரதான வேட்பாளர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தமிழ் மக்கள் பொது எதிரியாகக் கருதிய ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்தவராக இருந்தார். எனவே பெரும்பான்மையான தமிழ் மக்கள் அத்தரப்புக்கு எதிராக நின்ற மற்றைய வேட்பாளரையே ஆதரித்து வாக்களித்தார்கள். இருப்பினும் இம்முறை பிரதான வேட்பாளர்களாக மூவர் இருப்பதுடன், ராஜபக்ஷ தரப்பைச்சேர்ந்த வேட்பாளர் அந்த மூவரில் உள்ளடங்கவில்லை. இது யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தைத் தமிழர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது அல்லவா?
பதில் – (புன்சிரிப்புடன்) நீங்கள் அரசியல் கள யதார்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். எமக்கு பொது எதிரி ராஜபக்ஷ மாத்திரம் அல்ல. ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ என சகலரும் தான்.
சிங்களத்தலைவர்கள் எல்லோருமே எப்போதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் தான். எம்மைப்பொறுத்தமட்டில் அவர்கள் அனைவரும் பொது எதிரிகளே.
இருப்பினும் தமிழர்களின் தேவை கருதி, எந்தவொரு எதிரியுடனும் நாம் பேசுவோம். இப்போது அவர்கள் பெரும்பான்மையின்றி தமக்குள் திணறுகிறபோதுதான் தமிழர்களின் வாக்குகளின் பெறுமதி உணரப்படுகிறது.
கேள்வி – பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதை இந்தியா விரும்பவில்லை எனவும், இதுகுறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலுள்ள உண்மை என்ன?
பதில் – இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ யாருக்கும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகித்ததாக நான் அறியவில்லை. எம்மிடமும் ‘அவ்வாறு செய்யவேண்டாம்’ என்றோ அல்லது ‘அவ்வாறு செய்யுங்கள்’ என்றோ இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இதுவரை பிரயோகிக்கவில்லை. எனவே பிறிதொரு நாடு தொடர்பில் தவறான கருத்துக்களைப் பரப்புவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி – எது எவ்வாறிருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பெரும்பான்மையின சிங்கள அரசாங்கத்துடன்தான் பேசவேண்டும் என்ற ஏற்புடைமை உங்களிடம் இருக்கிறதா?
பதில் – இந்நாட்டில் சிங்கள தேசிய இனத்தின் தனித்தன்மையை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதேபோன்று தமிழர்களை ஒரு தேசிய இனமாக சிங்களத்தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இருப்பினும் சிங்களத்தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவோ, சிங்கள மக்களிடம் கொண்டுசெல்லவோ இல்லை. இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து சிங்கள அரசாங்கத்துடன் ஒரு தரப்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஏனெனில் நாம் இலங்கைக்குள் தான் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கோருகின்றோமே தவிர, இலங்கைக்கு வெளியில் கோரவில்லை. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழர் ஒருவரால் ஜனாதிபதியாக முடியாது. எந்தவொரு சிங்களக்கட்சியும் தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்காது.
சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை களமிறக்குவதையோ அல்லது அவர்களது அரசாங்கத்துக்கு சேவகம் செய்த லக்ஷ்மன் கதிர்காமரைக் களமிறக்குவதையோ அவர்கள் விரும்பவில்லை. அத்தகைய மனப்பான்மையில் இருப்பவர்களால் தமிழர் தீர்வு விவகாரத்தை சரியானமுறையில் கையாளமுடியாது.
கேள்வி – தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்துடன் அரசியல் தீர்வு குறித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பீர்களா?
பதில் – எவர் வந்தாலும் நாங்கள் பேசுவோம். யாரோடு பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மாறாக தமிழர்களுடன் பேசமுடியாது என்று அவர்கள் கூறினால், அதுவும் சிறந்த விடயம் தான். தமிழர்கள் வேறு நாடு. அவர்கள் வேறு நாடு.
அவர்களாகவே எம்மைப் விலக்கிவிடுவதற்கும் (தனி நாடாக) அது ஒரு களத்தைத் தரும். எனவே அவர்களும் எம்மோடு பேசித்தான் ஆகவேண்டும். நாங்களும் அவர்களுடன் பேசித்தான் ஆகவேண்டும் என்ற கள யதார்த்தத்தை நாhம் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறோம்.