தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா?
.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சியையோ அல்லது புதிய தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கட்சியையோ ஆரம்பிக்க முயன்றால் பொது வேட்பாளரை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட மாகாண சபை அவை தலைவரும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலை வருமான சி. வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால், தமிழரசு கட்சியில் உள்ள சிலர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக நானும் கேள்விப்பட்டேன். கட்சியிலிருந்து யாரும் வெளியேறலாம் புதிய கட்சியை யாரும் ஆரம்பிக்கலாம் இவை ஜனநாயக நடைமுறை. இதைப் பற்றி நான் பேச வரவில்லை.
ஆனால் தமிழரசு கட்சியை உடைத்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிப்பது தற்போது பொது வேட்பாளர் விடையத்தில் நடந்ததைப் போல பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.
இதன்போது கேள்வி அனுப்பிய ஊடகவியலாளர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனக்கு 60 கோடி ரூபா தந்தது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள என கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவருடைய கருத்து அபிவிருத்தி அரசியலுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்களா என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதன் போது பதில் அளித்த சிவஞானம் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மட்டும் ஜனாதிபதியால் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை.
ஏனைய பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் முன்மொழிவு திட்டங்களின் அடிப்படையில் நிதி கூடி குறைந்திருக்கலாம்.
அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சி அபிவிருத்தி சார்ந்த வேலைகளை முன்னெடுக்காது என்று எப்போதும் கூறியது கிடையோது, தமிழ் மக்களுடைய உரிமை எவ்வாறு முக்கியமோ மக்களுடைய அபிவிருத்தியும் எங்களுக்கு முக்கியம்தான் என தெரிவித்தார்.