எந்த வாகனமும் ஏலம் விடப்படாது: ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி, நேற்று 107 வாகனங்கள் மூன்று இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் எதுவும் ஏலம் விடப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வாகனங்கள் கடந்த அரசாங்கத்தினால் ஆலோசனை பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளை உருவாக்கி வெறும் அவர்களின் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது.
அகில விராஜ், ருவான் விஜேவர்தன, ஆஷு மாரசிங்க, ரோசி சேனாநாயக்க, சமன் ரத்னப்பிரிய, ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் போன்றவர்களும் வாகனங்களை திருப்பி அனுப்பியவர்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
வாகனங்களின் சாவிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், வாகனங்களை மீளாய்வு செய்து தேவைகளின் அடிப்படையில் வைத்தியசாலைகள், பொலிஸ் மற்றும் கல்வி அமைச்சு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்படும்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள 833 வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்திற்கு 16 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.