சுரேஷ் சலே PTA-யின் கீழ் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது, நீதிமன்றம் செல்ல திட்டம்!
சுரேஷ் சலேவுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் 2018 ஜனவரியில் ஒரு சந்திப்பை பிள்ளையான் ஏற்பாடு செய்ததார்.
இலங்கையின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து 90 நாட்கள் தடுத்து வைத்ததன் சட்டப்பூர்வ தன்மையை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்ல சட்டத்தரணிகள் குழு தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே புதிய பொதுப் பாதுகாப்புச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, கடந்த 25ஆம் திகமி பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய நீதிமன்றம் அவருக்கும் மேலும் ஒரு குழுவினருக்கும் பயணத் தடை விதித்துள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரித்தானியாவின் செனல் 4 வெளியிட்ட புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக இருபத்தைந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாரத்தில் ஐந்து நாட்கள் விசாரிக்கப்படும் மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட உயர்நீதிமன்ற வழக்கில் தற்போது முக்கிய அரச தரப்பு சாட்சியாக உள்ளார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், முன்னாள் புலனாய்வுத் தலைவர், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தலைமையில் நிறுவப்பட்ட 'பாத் பைண்டர்' அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்க பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஆயுதப்படையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியான சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சட்டம் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கான வலுவான ஆதாரங்களைக் கொண்ட அடக்குமுறை சட்டமாகும். இந்த கைதுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முன்னணி சட்டத்தரணிகள் குழு தீர்மானித்துள்ளது. "இது முற்றிலும் சட்டவிரோத கைது. சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம்," என பெயர் வெளியிட விரும்பாத சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் ஒருவர் கூறினார்.
செப்டெம்பர் 5, 2023 அன்று செனல் 4 ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியான SRI LANKA'S EASTER BOMBINGS: DISPATCHES இல் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், 2024 ஒக்டோபரில் பொது பாதுகாப்பு செயலாளர் ரவி செனவிரத்னவிடம் தான் சமர்ப்பித்த முறைப்பாடு குறித்து ஒரு விசாரணை நடந்து வருவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்த ஒரு ஊடக அமைப்பில் உயர் பதவியை வகிக்கும் ஒரு அருட்தந்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் முறைப்பாடு!
"2024 ஆம் ஆண்டு நாங்கள் தாக்கல் செய்த முறைப்பாடு தற்போது செயலில் உள்ளது என்பது தெளிவாகிறது. அதில் நாங்கள் முறைப்பாடு அளித்தவர்கள். தற்போது, பொலிஸார் அவ்வப்போது நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்கையிட்டு வருகின்றனர்," என அருட்தந்தை கூறினார். செனல் 4 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஒரு கத்தோலிக்க அமைப்பு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நவம்பர் 11, 2024 அன்று கோட்டை நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் மேலதிக விசாரணைக்காக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டதாக அதேநாளில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி., சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பிள்ளையான் நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
சுரேஷ் சலேவுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் 2018 ஜனவரியில் ஒரு சந்திப்பை பிள்ளையான் ஏற்பாடு செய்ததாக சுரேஷ் சலேயின் ஊடகச் செயலாளர் ஆசாத் மௌலானா செனல் 4 ஊடாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கமைய, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில், புத்தளம் கரடிப்புவலில், முக்கியக் குற்றவாளியான தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் சகோதரர் சைனி மௌலவி உள்ளிட்ட குழுவுடன் இரகசியக் கூட்டம் நடத்தியதாக மௌலானா தெரிவித்தார்.
சுமார் 280 பேரைக் கொன்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் தனது வேட்புமனுவை அறிவித்த கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் ஒரு விசேட ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி பிரட்ரிக் உதயகுமார் வூட்லர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி கைதுக்கான காரணத்தை வெளியிடவில்லை. "நான் உறுதியாகச் சொல்ல முடியாது. நீண்ட விசாரணை இருக்கும் என்பதால், அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்று செயற்படுவார்கள் என நான் நினைக்கிறேன்," என மூத்த டி.ஐ.ஜி சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
வெளிநாட்டு பயணங்களுக்கு தடை
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்புடைய முறைப்பாட்டை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்ததை அடுத்து, முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்தது. இந்த ஆறு பேரில், இரண்டு பொதுமக்கள் மற்றும் தீவிர இராணுவ சேவையில் ஈடுபட்ட நான்கு அதிகாரிகளும் அடங்குவர். நான்கு இராணுவ வீரர்களில் ஒருவரான முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கெலும் மத்துமகே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் சார்பாக முன்னாள் நீதி அமைச்சரும் கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய அரசியல் நண்பருமான சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
மனு விசாரணையின்போது சுரேஷ் சலேவை கைது செய்தமைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சப்ரி கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளார். காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவரின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, சுரேஷ் சலேயின் சட்டத்தரணிக்ள அல்லது அவரது மனைவி மற்றும் தந்தை உட்பட நெருங்கிய உறவினர்கள் சந்தேகநபரை இரண்டு நாட்கள் சந்திப்பதைத் தடுத்த பயங்கவாரத பொலிஸார், தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்ற பின்னரே அந்த அனுமதியை வழங்கியது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்காததன் மூலம், புலனாய்வு சேவைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்கள், அரச புலனாய்வுப் பிரிவுகள், தனிநபர் உரிமைகளை மீறுவதை உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தரணிகள் தொடர்ந்து விமர்சித்துள்ள பல நிகழ்வுகள் காணப்படுகின்றன.


