ஈரானின் ஏவுகணைகள் என்னென்ன செய்யும்? தரைமட்டமாகுமா அமெரிக்க ராணுவ தளங்கள்? பரபரப்பு தகவல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மொத்தம் 60 ராணுவ தளங்கள் உள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் என்பது தொடர்ந்து வலுத்து வருகிறது. ஈரான் மீது இதுவரை யாரும் பார்க்காத அளவுக்கு குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஈரானிடம் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஏவுகணைகள் என்னென்ன? அதனை வைத்து அமெரிக்காவின் எத்தனை ராணுவ தளங்களை தாக்க முடியும்? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஈரான் தற்போது அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனை காரணம் காட்டி ஈரானை சீண்ட தொடங்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப். அதாவது ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. மாறாக அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்கும்பட்சத்தில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்ய டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
அணுசக்தி ஒப்பந்தம்
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஈரான் செவிசாய்க்கவில்லை. அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இல்லை. இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் தான். அதாவது கடந்த 2017-2021 வரை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக பதவியேற்றார். அப்போது அவர் ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். அதுமட்டுமின்றி கடந்த 2015ம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா போட்ட ஈரான் அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனால் டொனால்ட் டிரம்புக்கும், ஈரானுக்கும் தனிப்பட்ட பகை உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. டிரம்ப் கொலை முயற்சியின் பின்னணியில் ஈரான் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
குண்டு வீசுவதாக அமெரிக்கா வார்னிங் இதனால் நாளுக்கு நாள் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வலுத்து வருகிறது. இப்படியான சூழலில் அணுசக்தி திட்டம் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துள்ள நிலையில் அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு குண்டுகள் வீசப்படும் என்று டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. ஈரானை பொறுத்தவரை அமெரிக்கா உடனான தொடர் மோதலுக்கு நடுவே ஈரான் தனது ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வந்தது. குறிப்பாக கடந்த 2020 ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தார். 2020 ஜனவரியில் ஈரானின் வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை பிரிவின் தலைவராக இருந்த ஜெனரல் காசிம் சுலைமானியை டிரம்ப் கொன்றார். அன்று முதல் ஈரான் தனது ராணுவ வலிமையை பலப்படுத்த தொடங்கியது.
விமானம்- வீரர்கள் குவிப்பு
இப்போது மீண்டும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகி உள்ள நிலையில் அவர் மூலம் ஈரானுக்கு பகிரங்கமாக மிரட்டல் என்பது விடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஈரானை தாக்கும் வகையில் B 2 Bombers என்ற போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா எனும் பவளத்தீவில் உள்ள விமானப்படை தளத்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள படை தளங்களில் அமெரிக்கா சுமார் 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. இப்படியாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் முற்றிய உள்ள நிலையில் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் ஈரான் தனது ஏவுகணைகளை கையில் எடுத்துள்ளது. ஈரானில் இருந்து அமெரிக்காவின் படை தளங்களை குறிவைக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் ஈரான் வசம் உள்ள சக்திவாய்ந்த ஏவுகணைகள் என்னென்ன? அந்த ஏவுகணையால் அமெரிக்காவின் எத்தனை ராணுவ தளங்களை தாக்க முடியும்? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கியாம் ஏவுகணை அதன்படி ஈரானிடம் கியாம் ஏவுகணை (Qiam Missile)உள்ளது. இந்த ஏவுகணையால் 800 முதல் 1000 கிமீட்டர் தூரத்துக்கு 750 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று தாக்க முடியும். அடுத்ததாக ஹஜ் காசிம் ஏவுகணை (Haj Qasim Missile) இருக்கிறது. இந்த ஏவுகணை என்பது 500 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று 1,400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். அதேபோல் கிபார் ஷாகீன் ஏவுகணை (Khebar Shaken Missile) 500 கிலோ வெடிப்பொருட்களுடன் 1,450 கிலோமீட்டர் இலக்கை தாக்கும் சக்தி கொண்டதாக உள்ளது. இமாத் ஏவுகணை (Imad Missile) என்பது 750 கிலோ வெடிப்பொருட்களுடன் 2 ஆயிரம் கிலோமீட்டர் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
2,000 கிமீ தாக்கும் ஏவுகணை
காதர் 110 ஏவுகணை (Gadar 110 Missile) என்பது 1,600 முதல் 2000 கிலோமீட்டர் வரை பயணித்து 1000 கிலோ வெடிப்பொருட்களுடன் தாக்குதலை நடத்தும். அபு மெஹதி ஏவுகணை (Abu Mahdi Missile) என்பது 400 கிலோ வெடிப்பொருளை சுமந்து 1,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. பாவே குரூஸ் ஏவுகணை (Paveh Cruise Missile) என்பது 1,650 கிலோமீட்டர் வரை பயணிக்க கூடியது. இந்த ஏவுகணை சுமந்து செல்லும் வெடிப்பொருட்களின் அளவு என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நாம் பார்ப்பது கோர்ராம்ஷஹர் ஏவுகணை (Khorramsharhr Missile) என்பது 2000 கிலோமீட்ர் பயணிக்கும். இந்த ஏவுகணை என்பது 1,800 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று கொடூர தாக்குதலை நடத்தும் சக்தி கொண்டதாக உள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த கோர்ராம்ஷஹர் ஏவுகணை என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை என்பது ஈரானின் முக்கிய துருப்புச்சீட்டாக பார்க்கப்படுகிறது. இந்த 8 ஏவுகணைகள் தவிர இன்னும் சில முக்கிய ஏவுகணைகளை ஈரான் கைவசம் வைத்துள்ளது.
60 அமெரிக்க தளங்கள்
மேலும் மத்திய கிழக்கு நாடாக ஈரான் உள்ளது. இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு மொத்தம் 60 ராணுவ தளங்கள் உள்ளன. இதில் விமானப்படை தளம், கப்பற்படை தளம் உள்ளிட்டவையும் அடங்கும். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் பஹ்ரைன் (5வது கடற்படை தளம்), அல் உதெய்ட் விமான தளத்தை (CENTCOM தலைமையகம்) கூறலாம். இதுதவிர ஓமன், சவுதி அரேபியா, ஈராக், ஜோர்டான், சிரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு கடற்படை தளம், விமான தளம் மற்றும் ராணுவ தளங்கள் உள்ளன.
இதனால் ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது பெரும் மோதலாக மாறும். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது ஏவுகணைகளை வைத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை தளங்களை நோக்கி தாக்குதல் நடத்தும். அதற்கு தேவையான ஏவுகணைகளை ஈரான் கைவசம் வைத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.