சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரமுன கோரிக்கை.
.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் ஆகியோர், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் இன்று இனவாதத்தைப் பரப்புவது யார்? தேவநம்பியதீசன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். இது இனவாதத்தை தூண்டும் செயல் இல்லையா? அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன?
யாழ்ப்பாணத்துக்கு சென்று, மக்களை அரவணைத்துக்கொண்டு இனவாதத்தை இடமில்லை என ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அங்குள்ளவர்களோ இன்று இனவாதத்தைத் தூண்டுகின்றார். அதேபோல யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். இது இனவாத செயல் இல்லையா? அரசாங்கம் உண்மையில் இவாதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது என்றால், இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.