ஆட்டம் காணுது அஸ்திவாரம்? விஜயின் முரண்.. 4வது தூணா? அப்ப அடுத்தவங்களுக்கு தக்காளி சட்னியா? : பிரபலம்.
.

பத்திரிகை அலுவலகம் மீது அன்று தாக்குதல் நடத்திவிட்டு, இன்று பத்திரிகை தர்மம் பற்றி நடிகர் விஜய் பேசுவது முரணாக உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். அத்துடன், விமர்சனங்களை எதிர்கொள்ள நிலைமை தவெக தலைவர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். சமீபத்தில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்... இதனை கண்டித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
விஜய் கண்டனம் அதில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?" என காட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதலை அன்றைய காலத்தில் நடத்திவிட்டு, இன்று பத்திரிகை தர்மம் குறித்து விஜய் பேசுவது முரணாக உள்ளதாக சாடியிருக்கிறார்..
நெளிந்த தகர டப்பா "ரசிகன் படம் குறித்த விமர்சனம், குமுதத்தில் வெளியானபோது, "நெளிந்த தகர டப்பா மூஞ்சி, இந்த மூஞ்சியெல்லாம் பார்க்கணும்னுகிறது தமிழ்நாட்டு ரசிகர்களின் தலையெழுத்து" என்று எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்து கொந்தளித்த எஸ்ஏ சந்திரசேகர், நேரடியாகவே குமுதம் ஆபீசுக்கு 60, 70 பேருடன், கிளம்பி சென்று அடித்து நொறுக்கினார்.. விமர்சனம் எழுதுனவனை வரச்சொல்லு, கையை வெட்டுறேன் என சீறினார். பிறகு எழுத்தாளர் சுஜாதா உட்பட குமுதம் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள், எஸ்ஏசியை கட்டுப்படுத்தி, சமாதானப்படுத்தினார்கள்.. விமர்சனம் எழுதிய தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இனிமேல் விஜய் பற்றி தவறாக எழுத மாட்டோம் என்றும் சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள். இப்படி நிறைய பத்திரிகை ஆபீஸ்களில் கலாட்டா செய்தார் எஸ்ஏசி. அறவழிப்போராட்டம் எங்கே அந்த நேரத்தில் கோபப்பட்டது சரிதான் என்றாலும், ஒரு நடிகரின் தகப்பனாக உள்ளவர், பல படங்களை இயக்கிய இயக்குனர், இந்த குமுதம் சம்பவத்தை மறைமுகமாக வன்மையாகவே கண்டித்திருக்கலாம்.. அல்லது வக்கீல் நோட்டீஸ் விடுத்து, சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது சட்டநடவடிக்கை எடுத்திருக்கலாம்.. அல்லது உண்ணாவிரதம், தர்ணா என அமைதியான விதத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கலாம்.. அதற்காக அடியாட்களுடன் சென்று தாக்குவதா? நடிகர் விஜய் இன்று வெறும் சினிமா நடிகராக இருந்திருந்தால், இந்த விமர்சனம் வந்திருக்காது.. ஆனால், அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.. ஆனால், இன்று நடிகராக மட்டும் இருந்திருந்தால், விகடன் பத்திரிகைக்கு குரல் கொடுத்திருப்பாரா? ஜனநாயகத்தின் 4வது தூண் காக்கப்பட வேண்டும் என்பது நியாயமான குரல்தான்.. ஆனால், அதற்கு விஜய் தகுதியானவரா? என்பதைதான் எல்லாரும் கேட்கிறார்கள்.
லொள்ளு சபா பேக்கிரி பத்திரிகை அலுவலகம் மீது அன்று தாக்குதல் நடத்திவிட்டு, இன்றைக்கு பத்திரிகை சுதந்திரத்துக்காக பேசுவது முரண்பாடாக உள்ளது. அன்னைக்கு ஒரு முகம், இன்னைக்கு ஒரு முகமா? சினிமாவில் நல்லா நடிப்பீர்கள் என்று தெரியும்.. அரசியலிலும் நடிப்பதாக பரவலாக பேசப்படுகிறது.. விஜய் டிவி லொள்ளு சபா என்பது, முழுக்க முழுக்க சுத்தமான காமெடி ஷோ என்பது அனைவருக்கும் தெரியும்.. அதில், போக்கிரி படத்தை "பேக்கிரி" என்று உல்டா செய்து காமெடி ஷோ செய்திருந்தார்கள்.. உடனே எஸ்எசி பயங்கரமாக இதை கண்டித்தார்.. சுவாமிநாதனே இதை வீடியோவில் சொல்லி உள்ளார்.. விமர்சனங்களை கடந்து போகும் மனநிலைமை ஏன் இவர்களுக்கு இருப்பதில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? இதுவரை என்ன செய்தார் இதைத்தானே எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.. இதற்கு முன்பு நடிகராக இருந்தபோது, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கி தந்திருப்பாரா விஜய்? அனாதை ஆசிரமத்துக்கு சோறு போட்டிருப்பாரா? முதியோர் இல்லங்களில் என்ன பங்களிப்பை செய்திருக்கிறார்? இவ்வளவு கோடிகளை கொடுத்த தமிழக மக்களுக்கு என்ன செய்தார்? இலவச பள்ளி, இலவச மருத்துவமனை கட்டி தந்தாரா? ஆனால், இன்னைக்கு எல்லாவற்றையும் செய்ய போவதாக சொல்கிறார்.. அப்படியானால், உங்களது மனமாற்றத்திற்கேற்றவாறு பேசுவீர்களா? இதையும் எதிர்க்கட்சிகள் கேட்கதான் செய்வார்கள்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.