"போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்" - வாடிகன் தேவாலயம் அறிவிப்பு!
.

போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலையடைந்துள்ளனர்.
நிமோனியா மற்றும் நுரையீரல் அலர்ஜி பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில், நேற்று (பிப்.22) சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) நுரையீரலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் போப் பிராசிஸின் நிலை மோசமடைந்துள்ளதாக வாடிகன் தேவாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்:
அதில், "போப்பிற்கு சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதால், அவருக்கு அதிகளவில் செயற்கை சுவாசம் (ஆக்ஸிஜன்) அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அவர் தற்போது வரை ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டு வரவில்லை.
உடலில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவருக்கு ரத்த மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், போப் பூரண நலம் பெற வேண்டி தேவாலயம் முன்பு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்கள் கவலை:
மேலும், போப் வயது மூப்பு மற்றும் அதிக எடை காரணமாக, நாற்காலியில் நாட்களைக் கழித்து வந்தார். தற்போது, நுரையீரல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக, அவரது உடல் நிலை மிகவும் பின்னடைந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலையடைந்து, மருத்துவமனை முன்பு கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போப்பிற்காக வெள்ளை மாளிகை சிறப்புப் பிரார்த்தனை:
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நேற்று சனிக்கிழமை கூறுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போப்பின் உடல்நிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்தான அவரது சொந்த அறிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், போப்பிற்காக நாங்கள் ஜெபிக்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.
செப்சிஸ் ஏற்பட வாய்ப்பு:
மேலும், போப் பிரான்சிஸ் எதிர்கொள்ளும் உடல்நிலைக் குறைவால் செப்சிஸ் (Sepsis) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது நிம்மோனியாவால் ரத்தத்தில் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, செப்சிஸ் இருப்பதற்கான அறிகுறி இல்லை. அதுமட்டுமின்றி, பிரான்சிஸ் உடல் கொடுக்கும் மருந்துகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என போப்பின் மருத்துவக்குழு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை நடத்திய பரிசோதனையில், அவருக்கு இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறைந்து பிளேட்லோபீனியா அல்லது த்ரோம்போசைட்டோபீனியா என்ற நிலை உருவாக்கியிருப்பதைக் காட்டியது. சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகள் அல்லது நோய் தொற்றின் பக்க விளைவு உள்ளிட்ட காரணங்களால், ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறையலாம் என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரோம் ஜெமெல்லி மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைத் தலைவர் மருத்துவர் செர்ஜியோ அல்ஃபியேரி வெள்ளிக்கிழமை கூறுகையில், "பிரான்சிஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்னவென்றால், அவரது சுவாசக் குழாயில் உள்ள கிருமிகள் ரத்த ஓட்டத்தில் சென்று செப்சிஸை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. இதனால், உறுப்புகள் செயலிழப்பு அல்லது உயிரிழப்பு கூட நேரலாம். அவரது சுவாசப் பிரச்னை மற்றும் வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இதிலிருந்து பிரான்சிஸ் மீண்டு வருவது மிகவும் கடினம்," என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராஜினாமா என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி:
இதற்கிடையே, வாடிகன் உயரதிகாரிகள், பிரான்சிஸ் ராஜினாமா செய்ய முடிவு செய்யலாம் என்ற வதந்திகளையும், யூகங்களையும் தடுக்க தற்காலிகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போப் ஒருவரின் உடல் உறுப்புகள் செயல்படாமல் போனால் என்ன செய்வது என்பதற்கு சட்டத்தில் (canon law) எதுவும் குறிப்பிடப்படவில்லை. மருத்துவ ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நேரத்தில், தான் அந்த ராஜினாமா கடிதத்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார். தற்போது போப் முழு உணர்வுடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.