ரீ-ரிலீஸ் கோதாவில் களமிறங்கும் சேரனின் ஆட்டோகிராப்.
.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த கோதாவில் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படமும் இணைந்துள்ளது. AI தொழில்நுட்பத்தின் துணை கொண்டு உருவான 'ஆட்டோகிராப்' திரைப்படத்தின் டிரெய்லரை நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
3 தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் ஆட்டோகிராப் : 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படத்தினை சேரன் இயக்கி, தானே நடித்தும் இருந்தார். சிறந்த படம், பாடல் மற்றும் வரிகளுக்கு 3 தேசிய விருதுகளை பெற்றது இந்த படம். இப்படத்தில் வெளியான 'ஞாபகம் வருதே' என பாடல், தனி மனிதனின் நினைவலைகளை தூண்டும். இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கோபிகா. நாயகனின் கல்லூரி பருவ காதலியாக அவர் நடித்தது பலரால் பாராட்டப்பட்டது. பள்ளி காதல், பருவ காதல், காதல் முறிவு, விரக்தி, ஆண்-பெண் நட்பு என பல உணர்வுகளையும் வெளிக்காட்டியது இந்த படம். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றி காரணமாக பல மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டது. இப்படத்தில் சேரன் தவிர, சினேகா, மல்லிகா, கனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.