உலக வன விலங்குகள் தினம்...குஜராத் கிர் காட்டில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!
குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டங்களில் 93 தாலுகாக்களில் 30,000 ச.கி.மீ ஆசிய சிங்கங்கள் வசிக்கின்றன.

சாசான் கிர் பகுதியில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் 7ஆவது தேசிய வன விலங்குகள் வாரியத்தின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்கிறார்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு குஜராத்தின் கிர் வன உரியினங்கள் சரணாலயத்தில் உலா வந்து சிங்கங்கள் உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
டெல்லியில் இருந்து நேற்று மாலை குஜராத் மாநிலம் சோம்நாத் நகருக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். சோம்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபட்டார். இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் வளாகத்தில் உள்ள வந்தாரா எனும் வன விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு, மறுசீரமைப்பு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். யானை மற்றும் வன விலங்குகள் நலனுக்காக இந்த மீட்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தப்படும் விலங்குகள் மீட்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து சாசான் சென்ற பிரதமர் அங்குள்ள சின் சதன் எனும் வனத் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். தொடர்ந்து இன்று காலை கிர் வன உரியினங்கள் சரணாலயத்தில், யானை மூலம் சவாரி செய்து வன விலங்குகளை ரசித்தார். தொடர்ந்து ஜீப் மூலமும் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி வன விலங்குகளை புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கிர் வன உயிரின பூங்காவின் தலைமை அலுவலகமான சாசான் கிர் பகுதியில் நடைபெற்ற 7-வது தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி, பல்வேறு மாநிலங்ளை சேர்ந்த வனத்துறை செயலாளர்கள், தலைமை உயிரின பூங்காக்களின் வார்டன்கள், வன உரியினங்கள் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சேர்ந்த 47 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் மோடி

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து பெண் வன உயிரின அலுவலர்களிடம் உரையாற்றினார். ஆசிய சிங்கங்களை அழியாமல் பாதுகாக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கி இருக்கிறது. குஜராத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உயிர்வாழ்கின்றன.
குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டங்களில் 93 தாலுகாக்களில் 30,000 ச.கி.மீ ஆசிய சிங்கங்கள் வசிக்கின்றன. கூடுதலாக தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனகத் மாவட்டத்தில் புதிய பிபால்யாவில் தேசிய பரிந்துரை மையம் ஒன்று 20.24 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. வனவிலங்குகளை கண்காணித்தலுக்கான உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு மையம், அதநவீன கால்நடை சிகிச்சை மயமும் சாசானில் அமைக்கப்பட உள்ளது.