அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி - நாடாளுமன்றத்திடம் இனப்படுகொலை அறிக்கை கையளிப்பு
,
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி - நாடாளுமன்றத்திடம் இனப்படுகொலை அறிக்கை கையளிப்பு,
அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது.
ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தமிழ் அகதிகளிற்கு பாதுகாப்பை கோரினார்கள்.
இந்த பேரணியின் பின்னர் அதில் கலந்துகொண்டவர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் சென்று ஈழ தமிழர்களிற்கு எதிராக திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆவணத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
தமிழர் ஏதிலிகள் பேரவையால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்து தெளிவான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன் ஏன் தமிழ அகதிகளை திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இலங்கையின் தசாப்தகால யுத்த குற்றங்கள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், இராணுவ ஆக்கிரமிப்புகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை துல்லியமாக பதிவு செய்துள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது.