மியன்மார் அகதிகளை கப்பலில் ஏற்றி வந்த படகோட்டி களுக்கு விளக்கமறியல்!
.
மியான்மார் (Myanmar) நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டுவந்த, படகோட்டிகளான, மியன்மார் நாட்டுப் பிரஜைகள் பன்னிரண்டு பேரையும் இந்த மாதம் 31ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் கடமை நீதிபதி அப்துல் சலாம் சாஹிர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி மாலை திருகோணமலையை வந்தடைந்த மியான்மார் நாட்டு படகிலிருந்த 114 அகதிகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே , நீதவானால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின், திருகோணமலை துறைமுக பொலிஸாரினால், இந்த அகதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மேலும், படகில் கொண்டுவரப்பட்ட, 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகளையும் கொழும்பு மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதான் உத்தரவிட்டார்.
இதன்படி, திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள், இன்று (21) காலை 6.45 மணி அளவில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகளில் மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
114 அகதிகளுடன் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய இந்தப் படகு நேற்று (20) அதிகாலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்தப் படகில், 26 சிறுவர்களும், 22 சிறுமிகளும் 39 ஆண்களும் மற்றும் பெண்கள் 27 பேரும் அடங்கியிருந்தனர்.
மேலும், அகதிகளில் ஆறு பேர் ஆழ் கடலில் உயிரிழந்ததாகவும், சடலங்களை கடலிலே வீசியதாகவும் அகதிகள் துறைமுகப் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.