ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது: பொன்சேகா கோரிக்கை
.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது எனவும், அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், ஊழல் மோசடிகளை கையாளும் நிறுவனங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாயவில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு கட்சிகளுக்கு அடிமையாகாமல் தேசிய தலைவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
ஒரே குழு பல்வேறு அரசியல் கட்சிகளை உருவாக்கி மக்களிடம் வந்தாலும் அவர்கள் நாட்டைப் பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகளை திறந்து விட்டதன் மூலம் எந்த ஒரு திருடனும் கட்சியில் சேரும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதிர்ச்சியையும் தலைமைத்துவத்தையும் வழங்க முடியாதவர்கள் ஜனாதிபதி வேட்புமனுவுக்கு பொருத்தமானவர்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திருடர்கள், எனவே நிறைவேற்று அதிகாரங்கள் ஒருபோதும் அகற்றப்படக்கூடாது.
நிறைவேற்று அதிகாரம் உள்ள இடத்தில் திருடர்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சரியான நபர் வந்து செயற்பட வேண்டும். நிறுவனங்களை சுத்தம் செய்ய வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.