ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர் ருவெண் ஜேவியர் அஸாரின் முக்கிய கருத்து!
,
இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படையினரை அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவர்கள் நாடு திரும்பியதன் பின்னர் அமெரிக்காவுக்கோ, எமக்கோ எதிரான போர்களில் ஈடுபடாதவாறான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கையின் தீர்மானத்தில் திருப்தி அடைவோம் என்று இஸ்ரேலிய தூதுவர் ருவெண் ஜேவியர் அஸார் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வழங்கிய விசேட செவ்வியின்போது, ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மூழ்கடிக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32பேரும், அவசர அடைக்கலம் கோரிய ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர் கப்பலிருந்து காப்பாற்றப்பட்ட 208பேரும் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான கோரிக்கை இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இஸ்ரேலின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படையினரை அவர்களது தாயகத்துக்கு அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். எம்மைப்பொறுத்தவரையில் குறித்த கடற்படை வீரர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது அவர்களோ அவர்களின் கப்பல்கள் எமக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ எதிரான போர்களில் ஈடுபடாதவாறு இருக்க வேண்டும். அவ்வாறான செயலிழப்பு செயற்பாட்டை உறுதிப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் திருப்தி அடைவோம் என்றார்.


