உணர்வுள்ள மனிதனின் மனிதமற்ற வன்கொடுமைகளுக்கு எதிராக இரும்பு இயந்திரங்கள்! 'ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்' ?.
'ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்' என்ற பாதுகாப்பு ரோபோ இயந்திரங்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சென்னை மாநகர போலீசார் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது “ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்” (Red Button Robotic COP) என்கிற ரோபோ போலீஸ் இயந்திரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படவுள்ளன. இதனால் பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், தைரியமாக வெளியே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் இன்றைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாக போய்விட்டது. பாலியல் சீண்டல்கள், பலாத்காரம் மட்டுமல்லாமல், காதலை ஏற்க மறுத்தால் கொலை செய்வது; ஆசிட் வீசுவது போன்ற குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, பெரும்பாலான பெண் பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும் ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர்.
இந்நிலையில்தான், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும்; குற்ற நிகழ்வுகள் அரங்கேறும் பகுதிகளிலும் அவசர காவல் உதவிக்காக, 'ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்' என்ற பாதுகாப்பு ரோபோ இயந்திரங்களை, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் 200 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப் என்ற இந்த போலீஸ் இயந்திரமானது, 24 மணிநேரமும் 360° கோணத்தில் பல மீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்த்து கண்காணிக்கும். நடப்பதை வீடியோ எடுப்பது மட்டுமல்லாமல், குரல்களையும் இது பதிவு செய்யும். அதேபோல, பெண்கள் உட்பட யாராவது ஏதேனும் ஆபத்தில் சிக்கினால், இந்த இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும். இதில் இருந்து அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி எழும்பும். இதனால் அருகில் உள்ள போலீசார் அப்பகுதிக்கு உடனடியாக வருவார்கள். அதுமட்டுமல்லாமல், ஆபத்தில் உள்ள பொதுமக்கள், போலீசாருடன் உரையாடும் வசதியும் இந்த இயந்திரத்தில் உள்ளது. மேலும், மைக்ரோபோன் வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த இயந்திரத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம், காவல்துறைக்கு உடனடியாக தகவல் சென்று சேரும். குறிப்பாக, அதிக ஒலி எழுப்பி எச்சரிக்கை ஏற்படுத்தும். இதன்மூலம், அருகில் உள்ள நபர்கள் கூட அவர்களுக்கு உதவிக்கு வரலாம்.
ஆபத்தில் உள்ளவர்கள், வீடியோ கால் மூலமாக நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும், ரோந்து வரும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து , விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கவும், கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், புலன் விசாரணையைத் தொடங்கி நடவடிக்கை எடுத்திடவும் இந்த இயந்திரத்தில் வசதிகள் உள்ளன. ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப் சாதனத்தில் 24 மணி நேரமும் இண்டர்நெட் வசதிகள் இருக்கும்.
சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 காவல் மண்டலங்களில் தலா 50 இடங்களில் காவல் ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப் சாதனத்தை அமைக்க, பொருத்தமான இடங்கள் குறித்து கள ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் வரும் ஜூன் முதல் இந்த இரும்பு போலீசார் மாஸாக களமிறங்கவுள்ளனர்.