மனம் திறக்கும் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி
'நான் செகரட்டேரியட்ல ஃபைனான்ஸ் பிரிவுல வேலை பாக்குறேன். அரசு வேலை இருக்குஇ பயப்படாதே'

'சினிமாகாரர்னு தயங்கினப்போ, 'எனக்கு அரசு வேலை இருக்கு, பயப்படாதே'னு சொன்னார்!'
சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தவர், "சின்னக் கலைவாணர்" என்றும், "ஜனங்களின் கலைஞன்" என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக். கடந்த 2021-ம் ஆண்டு நிகழ்ந்த இவரது திடீர் மரணம், உலகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் உண்டாக்கியது.
விவேக்கின் மறைவுக்குப் பிறகும் அவர் நடித்த படங்கள் வெளியானதே சொல்லும், மரணத்துக்கு முந்தைய தருணம் வரைகூட அவர் எந்தளவுக்கு சினிமாவில் பிஸியாக இருந்தார் என்று. இந்த மாபெரும் நகைச்சுவைக் கலைஞருக்கு சகலமுமாய் இருந்தவர், அவரின் மனைவி அருட்செல்வி. இதுவரை மீடியாவில் முகம் காட்டாதவர், தன் கணவர் குறித்தும், தங்களின் பெர்சனல் வாழ்க்கை, மரணத்தால் நிலைகுலைந்த குழந்தைகள், எதிர்காலம் போன்ற பல விஷயங்கள் குறித்தும் முதன் முறையாக மனம் திறக்கிறார்....
'கொரோனா பெருந்தொற்று சமயத்துல தடுப்பூசிகள் அறிமுகம் ஆனப்போ, பொதுமக்கள் அதைப் போடலாமா, வேணாமானு ரொம்ப குழப்பமான மனநிலையில இருந்தாங்க. அதனால, 'கொரோனா தடுப்பூசியை மக்கள் பயப்படாம போட்டுக்க நாம முன்னுதாரணமா இருக்கணும்'னு சொன்ன என் கணவர், தடுப் பூசியை சுகாதாரத்துறை இயக்குநர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில அரசு மருத்துவமனையில போட்டுக்கிட்டார். துரதிர்ஷ்டவசமா, மறுநாள் அவர் மாரடைப்பால இறந்துட்டார்'' என்றவருக்கு அந்த அதிர்ச்சி இன்னும் முழுமையாக விலகவில்லை.
என் கணவர் மாதிரி ஆரோக்கியத்துல அக்கறை காட்டினவங்க இருக்கவே முடியாதுனு சொல்ற அளவுக்கு, உடல்நலத்துக்கு முக்கியத் துவம் கொடுப்பார். வாக்கிங்,யோகா, டிரெட் மில்னு பயிற்சிகளை ரெகுலரா பண்ணி உடம்பை ரொம்ப ஃபிட்டா வெச்சிருந்தார். அப்படி இருந்தவரோட இழப்பை என்னால தாங்கிக்கவே முடியல. ஆனாலும், சூழல் எனக்கு அதிக அவகாசம் கொடுக்காம சீக்கிரமே நார்மலை நோக்கித் திரும்பவெச்சது. காரணம், என் குழந்தைகள் என்பவர், அந்தக் கடுமையான சூழல் பற்றி பகிர்ந்தார்.
ஒரு குடும்பத்துல அப்பா இறந்துபோயிட்டா, குழந்தைங்க உடனே திரும்பிப் பாக்குறது அம்மாவைத்தான். சோகமா, அழுதபடி படுத்துக் கிட்டே இருக்கிற அம்மாவை எந்தக் குழந்தைகளாலும் ரொம்ப நாள் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. 'அப்பாவுக்குப் பிறகு அம்மா நமக்காக இருக்காங்க' அப்படீங்கிற நம்பிக்கையை என் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பா இருந்தது. அதனால, அவங்களுக்காக நான் துக்கத்தை மனசுல புதைச்சிட்டு, சீக்கிரமா பழைய நிலைக்குத் திரும்பினேன்'' என்றவர், தாங்கள் திருமண பந்தத்தில் இணைந்த நினைவுகளுக்குள் சென்றார்...
'என் கணவரைப் போலவே என்னுடைய பூர்வீகமும் மதுரைதான். அப்பா, இந்தியன் ஏர் ஃபோர்ஸ்ல இருந்தாரு. அதனால ஆக்ரா, சண்டிகர்னு நாங்க நார்த் இந்தியாவுல இருந்துட்டு, நான் காலேஜ் படிக்கும் போதுதான் சென்னைக்கே வந்தோம். நான் சென்னையில காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்போ, அவர் சிறப்பு விருந்தினரா எங்க காலேஜுக்கு ஒருசமயம் வந்திருந்தார். எங்க கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மூலமாத்தான் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே நிச்சயமாச்சு. அது ஒரு சுவாரஸ்யமான கதை' என்று புன்னகைக்கிறார் அருட்செல்வி.
'நான் அப்போ காலேஜ்ல ஃபைனல் இயர் படிச்சிட்டிருந்தேன். அந்த பேராசிரியருக்கு ரொம்பப் பிடிச்ச மாணவி நான். எனக்கும் அவர் மீது தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு. ஒருநாள் அவர் என்கிட்ட ஒரு கவரை கொடுத்து, அதை என் அம்மா கிட்ட கொடுக்கச் சொன்னார். நானும் கொண்டுபோய் கொடுத்தேன். அதுல, அந்தப் பேராசிரியர் எங்க அம்மாவுக்குக் கடிதம் ஒண்ணு எழுதி யிருந்தார்.
'நடிகர் விவேக்கோட அம்மாவும் நானும் ஃபிரெண்ட்ஸ். அவரோட அம்மா, அவருக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதைபத்தி அவங்க சொன்னதும், எனக்கு அருட்செல்வி ஞாபகம்தான் வந்துச்சு. அதான் உங்ககிட்ட இந்த வரன் பத்தி சொல்லலாம்னு நினைச்சேன். நீங்க அருட்செல்வியை மேற்கொண்டு படிக்க வைக்கப்போறீங் களா... அல்லது கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறீங்களா...' - இப்படி போனது அந்தக் கடிதம். அப்புறம் எங்க இரண்டு குடும்பங்களும் சந்திச்சுப் பேசி 1993-ல எங்களோட திருமணம் நடந்துச்சு' என்கிற அருட்செல்விஇ ஆனாலும் தன் வீட்டில் தயங்கியதாகச் சொல்கிறார்.
'அப்போவெல்லாம் சினிமாக்காரங் களுக்கு பொண்ணு கொடுக்க பயப் படுவாங்க. எங்க வீட்டுலயும் முதல்ல அந்தத் தயக்கம் இருந்துச்சு. 'நான் செகரட்டேரியட்ல ஃபைனான்ஸ் பிரிவுல வேலை பாக்குறேன். அரசு வேலை இருக்குஇ பயப்படாதே'னு அவர் நம்பிக்கை கொடுத்தார். எங்க கல்யாணத்தப்போ அவர் சினிமாவுல அவ்வளவு புகழ் பெறலை. அதனால, அவரோட அரசு வேலையை நம்பித்தான் என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க ரெண்டாவது பெண் குழந்தை பிறந்திருந்த சமயத்தில்தான் அவர் அந்த வேலையை விட்டுட்டு, முழு நேரமா சினிமாவுக்கு வந்தார்.
அவரோட வாழ்ந்த வாழ்க்கை ரொம்ப அழகானது. எனக்கு ஒரு நல்ல கணவராவும், நண்பராவும் இருந்தார். என் சமையலை அவர் ரொம்ப ரசிச்சுப் பாராட்டுவார். அதேசமயம், 'எனக்கு சாப்பிட இதுதான் வேணும்'னு டிமாண்ட் பண்ண மாட்டார். பிள்ளைகள் மேல அவருக்கு அவ்வளவு உயிர். சில சமயங்கள்ல பிள்ளைங்க படிக்க சிரமப்படுறப்போ, அவ்வளவு எளிமையா பாடங்களைச் சொல்லிக் கொடுப் பார். பிள்ளைகள் பெரிய கிளாஸ் போகப் போக அவங்களோட பிராக்டிக்கல் நோட்ஸ்ல அவ்வளவு அழகா படங்களை வரைஞ்சு கொடுப்பார்' - கணவர் குறித்துப் பேசுகையில் கண்கள் ஒளிர்கின்றன.
'எங்களோட முதல் மகள், அமிர்தா நந்தினி. ஆர்க்கிடெக்ட்டா இருக்காங்க. இரண்டாவது மகள் தேஜஸ்வினி, சட்டம் படிச்சிட்டு இருக் காங்க. அடுத்து, மகன் பிரசன்னா. தொடர்ந்து, பிரசாந்தினி, பிரார்த்தனானு பெண் குழந்தைகள், ட்வின்ஸ். எங்க மகன் பிரசன்னாவை, 13 வயசுல இழந்துட்டோம். என் கணவரோட எல்லா பண்புகளும் அவன்கிட்ட இருக்கும். 'உங்கப்பா சின்னப்பிள்ளையா இருந்தப்போ செய்த எல்லாத்தையும் நீயும் செய்யுறடா...'னு என் மாமியார் ஆச்சர்யமா, அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க' என்று சொல்லும்போதே குரல் உடைகிறது அருட்செல்விக்கு.
'எங்க மகனோட மறைவு உண்டாக்கின வலியும் வேதனையும் அவர்கிட்ட கடைசி வரைக்கும் இருந்தது. ஆனா, அது எதையுமே அவர் எங்க முன்னாடி காட்டிக்கிட்டது இல்ல. ஒரு நகைச்சுவை நடிகரா எல்லாரையும் சிரிக்க வைக்கிற தொழில்ல இருந்ததாலஇ தன்னோட சோகத்தை மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு அவர் மக்களை கடைசி வரைக்கும் என்டர் டெயின் பண்ணினார்.
எங்க மகனோட இறப்புக்குப் பிறகு, அவன் பேர்ல அறக்கட்டளை ஒண்ணு ஆரம்பிச்சு, அதன் மூலமா சமூகப் பணிகளைச் செய்துவந்தார். அவரோட இறப்புக்குப் பிறகு, அப்பணிகளை நானும் என் மூத்த மகளும் செய்துட்டு வர்றோம்.
மறைந்த இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவின் அறிவுரையின்படி, மரக்கன்று நடும் திட்டத்தை என் கணவர் ரொம்ப ஆர்வத்தோடு செய்துவந்தார். தான் மறையும்வரை 37 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டார். அவர் விட்டுச்சென்ற அந்தப் பணியை இப்போ நான் செய்திட்டிருக்கேன். அவரோட கனவான, ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கை அடையணும் என்பதுதான் என் லட்சியமா இருக்கு. என் கணவரோட ஆசி களோடு, என்னைச் சுற்றியிருக்கும் நல்லுள்ளங் களின் ஒத்துழைப்போடு... நிச்சயம் அது நடக் கும்' - தீர்க்கத்துடன் சொல்கிறார் அருட்செல்வி.
நினைவிலும் செயலிலும் வாழட்டும்... விவேக்.