கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க 4 வாரம் காலக்கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!
கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களும் இனி "அரசுப் பள்ளி" என மாற்றப்பட வேண்டும்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில கல்வி நிறுவனங்களில் ஜாதி அடையாளம் கொண்ட பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கல்வி என்பது சாதி, மதம், மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், ஜாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க ஆணை பிறப்பித்துள்ளது.
"இதற்காக பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்களுக்கு I.G. மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும். சட்டவிரோதமாக ஜாதி அடையாளத்துடன் தொடரும் சங்கங்கள் குறித்து பதிவு ரத்து செய்யப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதி குறித்த வார்த்தைகளை 4 வாரங்களில் நீக்க வேண்டும். இல்லையெனில், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்" எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஜாதி பெயருடன் இருக்கும் அரசு பள்ளிகளும் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்
சென்னை உயர் நீதிமன்றம் தனது அறிவுறுத்தலில் அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களும் இனி "அரசுப் பள்ளி" என மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு, கல்வி நிறுவனங்களின் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டும் இடம்பெறலாம். ஆனால், அவர்களின் ஜாதி அடையாளம் குறிப்பிடப்படக் கூடாது. தமிழகத்தில் கல்வித்துறையில் சாதி அடையாளங்களை ஒழிக்க உயர்நீதிமன்றம் எடுத்த வலுவான, நேரடி நடவடிக்கையாக இது கருதப்படுவதால், இந்த உத்தரவு பலரால் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் "இது எங்கள் சமூகத்துக்கே" என்ற வகையில் பெயரிடப்பட்டு, மாணவர்களிடையே பாகுபாடும், அழுத்தமும் ஏற்படுவதாக ஒரு மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் இந்த திருப்புமுனை வாய்ந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.