வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும்.

மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது.
விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும்.
இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும்.
இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம்.
தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம்.
எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம்.
இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும்.
மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது.
இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம் - என்றார்.