Breaking News
மம்மூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கேரளத்தில் எழுந்த சர்ச்சை என்ன?
மோகன்லால் பூஜை செய்திருந்தால் அதற்காக இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
நடிகர் மோகன்லால், மம்முட்டிக்காக சபரிமலையில் சிறப்பு பூஜை செய்ததற்கு எதிர்ப்பு. தேவசம்போர்டு ஆவணங்கள் கசிந்தது. மோகன்லால், மம்முட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் தவறு ஏதும் இல்லை என பதிலளித்தார்.
நடிகர் மம்மூட்டிக்காக, சபரிமலையில் சிறப்பு பூஜை நடத்திய நடிகர் மோகன்லாலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டியும், மோகன்லாலும் பல ஆண்டுகளாக இணைப் பிரியாத நண்பர்களாக இருந்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், 2008ஆம் ஆண்டு வெளியான "Twenty:20" படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்காதது அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்து வந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் 'Kadal Kadannu Oru Mathukutty' படத்தில் மோகன்லால் நடித்திருந்தாலும், கேமியோ கதாபாத்திரத்திலேயே தோன்றினார்.
இந்த நிலையில், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அப்படத்திற்கு தற்காலிகமாக "MMM" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி, அவர்களது ரசிகர்களைக் குஷியாக்கியது. மேலும் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி தீயாய் பரவியது.
இது வதந்தி எனக் கூறி தகவலை மறுத்த "MMM" படக்குழு, மம்மூட்டி நோன்புக்குப் பின் படப்பிடிப்பில் இணைவார் என விளக்கம் அளித்தது. இதனால், மம்மூட்டி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலையில் தரிசனம் செய்த நடிகர் மோகன்லால், மம்மூட்டியின் முழு பெயரான முகமது குட்டி என்ற பெயரில் உஷ பூஜை செய்தார். இது தொடர்பான ரசீது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற எம்புரான் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்த ரசீதை தேவசம் போர்டில் இருக்கும் யாரோ கசிய விட்டதாக கூறினார்.
மோகன்லாலின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த சபரிமலை தேவசம்போர்டு, தங்கள் ஊழியர்கள் யாரும் ரசீதை கசியவிடவில்லை எனவும், மோகன்லால் தவறுதலாகக் கூறியிருந்தால் அதை திருத்திக் கொள்ள விரும்புகிறோம் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில், மம்மூட்டிக்காக மோகன்லால் சபரிமலையில் பூஜை செய்ததற்கு பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அப்துல்லா என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மம்மூட்டிக்கு தெரியாமல் மோகன்லால் பூஜை செய்திருந்தால் தவறில்லை, ஆனால் தெரிந்தே செய்திருந்தால் அதற்காக மம்மூட்டி இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்திக்க வேண்டுமெனவும், மோகன்லால் பூஜை செய்தது குறித்து மம்மூட்டி விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பதில் அளித்துள்ள மோகன்லால் மம்முட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
இப்படி சர்ச்சை ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரிய, மம்மூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் எம்புரான் படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு, மோகன்லால் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தளபதி படத்தின் "பாசம் வைக்க, நேசம் வைக்க, தோழன் உண்டு வாழ வைக்க..." என்ற பாடல் பாணியில், எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் இருவரும் இணைந்து சமாளிப்பதாக, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹார்ட்டீனை பறக்கவிட்டு நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்