அமெரிக்க விமானத்திற்கு சிறிலங்கா அனுமதி மறுப்பு - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வை!
சிறிலங்காவின் "நடுநிலைமை" என்பது ஒரு தந்திரோபாய சாமர்த்தியமான நகர்வாகும்!!!
சிறிலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச்20, 2026 இல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு அமெரிக்க போர்விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுத்ததாகத் தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி அளித்த விளக்கம், சிறிலங்கா "நடுநிலைமை" என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகும். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுக் குத்தகைக்கு சீனாவிற்கு விட்டிருப்பதையும் (மத்தல விமான நிலையத்திற்கு அருகிலுள்ளது), சீனாவுடனான சிறிலங்காவின் உறவையும், மற்றும் சிறிலங்காவின் கடந்த கால செயல்களையும் கருத்தில்கொள்ளும்போது, சிறிலங்காவின் இந்த நியாயப்படுத்தல் பூகோள அரசியல் விசுவாசங்களை மறைக்கும் மெல்லிய திரையே அன்றி வேறில்லை.
2017 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தின் செயல்பாட்டிலிருந்து எழும் சர்வதேச சட்டசிக்கல்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரஸ்ஸலஸில் (Brussels) உள்ள ஒரு புகழ்பெற்ற கடல்சார் சட்ட நிறுவனத்திற்குபணித்தது. (https://tgte-us.org/wp-content/uploads/2022/08/Expert-Opinion_Hambantota-Port-Project.pdf). அந்த ஆய்வு, ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கான முக்கிய கப்பல் பாதையிலிருந்து பத்துகடல் மைல்களுக்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதன்மையான இருப்பிடம், அதை “கடல்சார்பட்டுப் பாதையின்”(Maritime Silk Road) முதலீடுகளுக்கு ஒரு சொத்தாக மாற்றுகிறது என்று குறிப்பிட்டது. இது வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு அப்பால், பூகோள அரசியல் அம்சத்தையும், அதன் மூலம் ஒரு மூலோபாய மற்றும் பாதுகாப்புப் பரிமாணத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டது. ஜனாதிபதி டிரம்பின் (President Trump) முதல் நிர்வாகத்தின் போது, அப்போதையஅமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Vice President
Mike Pense) 2018 இல் சீனாகுறித்த தனது பிரபலமான உரையில், அம்பாந்தோட்டை சீன இராணுவத் தளமாக மாறக்கூடும் என்று
கூறினார். மேலும், சீனாவிற்கு சொந்தமான “யுவான்வாங் 5” (“Yuan Wong”) என்ற கண்காணிப்புக் கப்பல் ஒரு இராணுவ உளவுச் சொத்து என்று இந்தியா அதிருப்தி தெரிவித்ததை சிறிலங்கா பொருட்படுத்தாமல் , அக்கப்பலை ஆகஸ்ட் 2022 இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கியிருந்தது.
அண்மையில், தெற்காசியாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர்(Sergio Gor), கொழும்புத் துறைமுகம் தெற்காசியாவை உலகளாவிய சந்தையுடன் இணைக்கிறது, எனவேகொழும்பின் கடல்சார் பாதுகாப்பு முக்கியமானது என்று வலியுறுத்தினார். விநியோக சங்கிலிகளின் (Supply Chain) ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான வர்த்தகத்தை முன்னெடுப்பதிலும் அமெரிக்க-சிறிலங்கா கூட்டுறவு (Partnership) உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கொழும்பு சிறிலங்காவின் அரசியல் மற்றும் வணிக மையமாக இருந்தாலும், அது தென்மேற்கில், வங்காள விரிகுடா மற்றும் மலாக்கா நீர்ச்சந்தியின் முக்கிய கப்பல் பாதைகளிலிருந்து வெகுதொலைவில் உள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. கொழும்பின் மீதான அமெரிக்க கவனம் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பின் ஒரு முனையை மட்டுமே கையாள்கிறது.
சிறிலங்கா இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான மூலோபாய இடத்தில் உள்ளது. அதன் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை கொடுக்கல் வாங்கல் தன்மையிலும். (transactional) நெகிழ்வுத்தன்மையிலும் (fluid) உள்ளது. பொருளியல் சார்புநிலை, வெளிப்புற அழுத்தத்திற்கு எளிதில் பணியும் நிலையை அதிகரிக்கிறது. மூலோபாய உறுதிப்பாடுகள் அரசியல் சுழற்சிகளைக் கடந்து நிலைக்க வாய்ப்பில்லை. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கருத்தியல் அணி சேர்க்கையும் சீனாவின் செல்வாக்கை ஆழப்படுத்தியுள்ளது, அதே வேளையில் புவியியல் யதார்த்தங்கள் சிறிலங்காவை இந்தியாவுடன் நெருக்கமாக கட்டிப்போடுகின்றன . எனவே, கொழும்பை மட்டும் அடிப்படையாகக் கொண்ட நீண்டகால மூலோபாய கூட்டாண்மை உடையும் தன்மை ஆனது. இதன் விளைவாக, அமெரிக்கா அல்லது எந்த வல்லரசுகளின் கொழும்பை மையப்படுத்திய கொள்கை, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் அமைதியையும் வழங்காது.
திருகோணமலையை மையமாகக் கொண்ட சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதி, நிலையான மூலோபாய அணுகலுக்கான ஒரு மாற்றுப் பாதையை வழங்குகிறது.திருகோணமலை உலகின் சிறந்த இயற்கை ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகும். இது விமானம் தாங்கிக் கப்பல் உள்ளடக்கிய கடற்படை சொத்துகளைத் தாங்கும் திறன் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளுக்கான முக்கிய தலைமையகமாக திருகோணமலை பயன்படுத்தப்பட்டபோது பெருமளவில் நீடித்த இராணுவ நடவடிக்கைகள் புரியும் திறனை அது காட்டியது,
இது மூலோபாய ஆற்றல் சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கான பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு வசதிகளில்ஒன்றையும் (tank farm)கொண்டுள்ளது.
திருகோணமலை, 1987 இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி தமிழர்களின் பூர்வீக தாயகம் என அங்கீகரிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழ் தேசம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமும், இறைமையும் மிக்க தனி நாட்டினை அமைக்க 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. 2009 இல் போர் முடிவடைந்த பின்னரும் சிறிலங்காவின் அரசியல் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட மறுத்துவருகின்றது. எனவே, தனித்துவமான அரசியல் மற்றும் வரலாற்று பரிமாணங்கள் கொண்ட ஒரு பூர்வீக தமிழ் தேசத்தின் இருப்பு திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
திருகோணமலையின் முக்கியத்துவம் தமிழ் தேசிய பிரச்சனையில் இருந்து பிரிக்க முடியாதது. 2013 ஆம் ஆண்டில், 100,000 க்கும்மேற்பட்ட தமிழர்களின் பங்கேற்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்த சுதந்திர சாசனத்தில்(Freedom Charter), சுதந்திர தமிழீழம் ஜனநாயக வல்லரசுகளுடன் நட்புறவைப் பேணும் என்று கூறப்பட்டுள்ளது.
முடிவாக, இந்தியப் பெருங்கடல் நிலையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமானால் சிறிலங்காத் தீவின் சிக்கலான பூகோள அரசியல் யதார்த்தங்களையும், மாறும் விசுவாசங்களையும் கண்டுகொள்ளாத "கொழும்பு மைய" கொள்கையிலிருந்து வல்லரசுகள் விடுபட வேண்டும். இந்திய சமுத்திரத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், சிக்கலான பூகோள அரசியல் யதார்த்தங்களையும், கருத்தில் எடுக்காமல் வல்லரசுகளால் மேற்கொள்ளப்படும் “கொழும்பை மையப்படுத்திய” வெளியுறவு கொள்கை பயன் தராது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், அவர்களின் தாயகத்தின் தனித்துவமான மூலோபாய மதிப்பையும் அங்கீகரிப்பதன் மூலம், சர்வதேச வல்லரசுகள் பரிவர்த்தனை சார்ந்த இராஜதந்திரத்திலிருந்து(transactional diplomacy) விடுபட்டு, நிலை த்து நிற்கக்கூடியதும் மற்றும் வெளிப்படைத்தன்மையதுமான பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை நோக்கி நகர முடியும்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


