இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…! எல்லாளன் நடவடிக்கை
தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட எல்லாளன் நடவடிக்கை.
எல்லாளன் நடவடிக்கை
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் க*ரும்பு*லி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.
இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான்.
“எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். வி*டுதலைப் பு*லிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது.
“வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.”
இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள்.
அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு க*ரும்பு*லி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன.
“நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்பு*லி கேட்டான்.
“நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது.
உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் க*ரும்பு*லி அணிக்குள் மூன்று பெண் க*ரும்பு*லிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் க*ரும்பு*லி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது.
நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை க*ரும்பு*லிகள் அணி நெருங்குகின்றது. க*ரும்*புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.”
அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அனுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சசீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள்.
தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தப் பூரிப்பு.
தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட எல்லாளன் நடவடிக்கை.
தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வான்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு க ரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.
தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த வி*டுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்பு*லிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.
விமான படைத்தளம் அழித்து வெற்றிக்கு வித்திட்டு வீரத்துயில் கொள்கின்ற தேசத்தின் புயல்கள்………..
லெப்.கேணல் இளங்கோ…
அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் பு*லிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.
எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.
விடுதலைப்பு*லிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.
உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.
சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.
21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.
லெப். கேணல் வீமன்…..
பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.
மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.
வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீ*ரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.
வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் பு*லிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.
அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.
பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.
லெப்.கேணல் மதிவதனன்……
என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.
அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.
பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீ*ரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் க*ரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.
மேஜர் இளம்புலி ….
இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.
இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் பு*லிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.
இவர்களோடு,
கப்டன் தர்மினி…
என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,
கப்டன் புரட்சி…
என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,
மேஜர் சுபன்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,
மேஜர் காவலன்…
என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,
கப்டன் கருவேந்தன்…
என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,
கப்டன் புகழ்மணி….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,
மேஜர் எழில்இன்பன்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,
கப்டன் புலிமன்னன்…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,
கப்டன் அன்புக்கதிர்…
என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,
கப்டன் சுபேசன்….
என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,
கப்டன் செந்தூரன்…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,
லெப். அருண்….
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,
கப்டன் பஞ்சீலன்…
என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,
மேஜர் கனிக்கீதன்….
என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,
கப்டன் ஈழப்பிரியா…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,
கப்டன் அறிவுமலர்…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,
கப்டன் ஈழத்தேவன்…
என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது ????????????
- ஊர்குருவி


