’தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசன் குரலில் ’விண்வெளி நாயகன்’ பாடல்!
இன்று (மே 24) மாலை சென்னையில் நடைபெறவிருக்கும் 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஸ்ருதிஹாசன் சென்னை வந்துள்ளார்.

‘நாயகன்’ திரைப்படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ள திரைப்படம் ’தக் லைஃப்’. வருகிற ஜுன் 5ஆம் தேதி இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் படத்திற்கு ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 24) மாலை சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறவிருக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஸ்ருதிஹாசன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ’கூலி’ திரைப்படம் எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு, “’கூலி’ படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டப்பிங்கில் நான் பார்த்த வரை எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். அனைவரும் ரசிப்பார்கள்” என பதிலளித்தார்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் பாட இருப்பது பற்றி கேட்டதற்கு, “இது எனக்கு மிகவும் மரியாதையான தருணம். என் வாழ்க்கை முழுவதும் நான் ஏ.ஆர்.ரகுமானின் மிகப்பெரிய ரசிகை.
அவர் பாடல் பாடுவதற்கு அழைத்தபோதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம். வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான்.
மேலும், ”’தக் லைஃப்’ படத்தை இன்னும் பார்க்கவில்லை. படம் வெளியானதும் ரசிகர்களுடன் சென்று பார்பேன். சிம்பு, திரிஷா உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது” என்றார்.
உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்த கமல்ஹாசனுக்கு இப்போது விண்வெளி நாயகன் என பட்டம் கொடுத்ததை பற்றிய கேள்விக்கு, ”எனக்கு அதில் எந்த கருத்தும் இல்லை. அவர் எனக்கு எப்போதும் அப்பா தான்” என பதில் கூறினார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, “இதுபற்றி கருத்து கூற விரும்புவதில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
’கூலி’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு, “நான் எதுவு சொல்ல முடியாது. இதுகுறித்து லோகேஷ் பேசினால் தான் நன்றாக இருக்கும். கூலியுடன் போட்டியாக வரும் அனைத்து படங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய படம் மீது தான் அக்கறை அதிகமாக இருக்கும்” என்றார்.
நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது குறித்த கேள்விக்கு, “கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. என்றைக்குமே மறக்க முடியாத அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நடிகர் கமலுடன் சேர்ந்து நடிப்பீர்களா என கேட்டபோது, “நீங்கள் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். நான் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அவர் தான் பிஸியாக இருக்கிறார். அவர் கூப்பிட்டால் உடனடியாக வந்துவிடுவேன். அவருடன் நடிப்பது எனக்கு தான் பெருமை” என பதில் கூறினார்.
இன்று ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கும் சூழலில் படத்திலிருந்து ஏற்கனவே ஜிங்குச்சா மற்றும் சுகர் பேபி என இரு பாடல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரு பாடல்களும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தக் லைஃநப் படத்தில் மொத்தம் ஆறு அல்லது ஏழு பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக டீசரில் இடம்பெற்ற விண்வெளி நாயகா பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இந்த பாடலை இன்றைய இசை நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.