சிறிலங்கா தித்வா புயலுக்கான அமெரிக்க வானுதவிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பு!
பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரிடையாக உதவி கொண்டுசேர்க்கக் கோரிக்கை!
சிறிலங்காவில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் வானூர்திகளை விரைவாக ஈடுபடுத்தி, $2 மில்லியன் மதிப்புள்ள அவசர உதவி வழங்கியமைக்காக அமெரிக்க இந்திய-பசுபிக் கட்டளைத் தலைமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆயினும், சிறிலங்கா அரசு வாயிலாகவும் அதன் இராணுவப் பொறியமைவு வாயிலாகவும் மட்டுமே விநியோகம் செய்யப்படும் உதவி வடகிழக்கிலும், மலையகத்திலும் மிகவும் நொந்து நலிந்த நிலையிலிருக்கும் தமிழ் மக்களிடமிருந்து மடைமாற்றப்படும் பேராபத்து குறித்துப் பன்னாட்டுச் சமுதாயத்திற்கு அவசர எச்சரிக்கை விடுக்கின்றோம்.
தமிழர் தாயகம் – குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மற்றும் மலையக மாவட்டங்கள், நுவரேலியா, கண்டி, பதுளை, மாத்தளை – பேரழிவு கண்டிருப்பதாகக் களச் செய்திகள் உறுதி செய்கின்றன. முகன்மையான அகக் கட்டமைப்பு தகர்ந்து விட்டது; ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. பன்னாட்டு செய்தி அறிக்கையின்படி உரிய நேரத்தில் தமிழ் மொழியில் பேரிடர் விழிப்புச் செய்திகள் விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக உயிர்கள் விலையாகத் தரப்பட்டுள்ளன என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவின் துயர்தணிப்பு முயற்சி சிறிலங்கா பேரிடர் மேலாண்மை மையத்தின் வாயிலாகவும் சிறிலங்க ஆயுதப்படைகள் வாயிலாகவும் ஒருங்கிணைக்கப்படுவது கண்டு கவலை கொள்கிறோம். பொருள்களைக் கொண்டுசேர்க்கும் ஏற்பாட்டில் உள்ள வசதியைப் புரிந்து கொள்கிறோம் ஆயினும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை சிறிலங்காவின் இராணுவம் ஓர் ஆக்கிரமிப்புப் படையே தவிர மனிதநேயப் படை இல்லை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க இந்திய-பசுபிக் கட்டளைத் தலைமையகத்திற்கு நினைவுபடுத்துகின்றது.
·
. வரலாற்று முன்னுதாரணம்: 2004 ஆழிப் பேரலையைத் தொடர்ந்தும், 2009 போரைத் தொடர்ந்தும் வந்த பன்னாட்டு உதவியானது சிறிலங்கா அரசினால் அமைப்புசார்ந்து உறிஞ்சிக் கொள்ளப்பட்டது, உயிர்பிழைத்த தமிழர்கள் துன்பத்தில் உழலும்போது அவ்வுதவி தெற்கில் அரசியல் அனுசரணைக்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
·.
. தற்போதைய நடப்பு நிலவரம்:வடகிழக்கில் துயர்தணிப்புதவி விநியோகத்தை இராணுவத்தின் கையில் ஒப்படைப்பது பாதிப்புற்றோரை அச்சங்கொள்ளச் செய்வதோடு, “பேரிடர் மேலாண்மை” என்ற போர்வையில் தமிழ்ப் பொதுமக்களின் வாழ்வை அரசு மேலும் தன் பாதுகாப்பு வலைக்கு உட்படுத்த இடமளிக்கிறது.
·. ஆழிப்பேரலை (சுனாமி) துயர்தணிப்பு முயற்சிகளில் கிடைத்த பாடங்கள்: சுனாமி பேரிடரைத் தொடர்ந்து அப்போதிருந்த சிறிலங்கா அரசும் அந்த நேரத்தில் தமிழ்ப் பகுதியில் நிகழ்வுபூர்வமான அரசை நடாத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சுனாமிக்குப் பிந்தைய நடவடிக்கை மேலாண்மைக் கட்டமைப்பை (P-TOMS) உருவாக்கின. பன்னாட்டு அரசுகளின் ஆதரவுகளும் இதற்கிருந்தன. இப்போது சிறிலங்கா அரசுத் தலைவராய் இருக்கும் அனுரகுமார திசநாயகா அந்த நேரத்தில் நில மேம்பாடு மற்றும் நீர்ப் பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் சுனாமிக்குப் பிந்தைய நடவடிக்கை மேலாண்மைக் கட்டமைப்பு (P-TOMS) உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். அவரது கட்சியாகிய ஜனத விமுக்தி பெரமுனாதான் இந்தக் கட்டமைப்பு சிறிலங்க அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குப் புறத்தே இருப்பதாக சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றமும் ஜனத விமுக்தி பெரமுனாவின் நிலையை ஏற்றுக்கொண்டதால் பி-டோம்ஸ் கட்டமைப்பு கலைக்கப்பட்டது. அதே உச்ச நீதிமன்றம் அதே தீர்ப்பில் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மறைமுகமான சட்ட அங்கீகாரத்தை வழங்கியது. அவ் உடன்படிக்கையும் சிறிலங்கா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
· அவசியத் தேவை பற்றிய பன்னாட்டு சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நிலைமைகளைக் கையாள்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறத்தே நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகிறது.
பன்னாட்டு அரசுகள் பாதிப்புற்ரவர்களுக்கே நேரிடையாக உதவி விநியோகிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகின்றது. அமெரிக்க வரிகொடுப்போரின் பணம் சிறிலங்கா அரசின் பாகுபாடான நடைமுறைகளுக்குத் தீனிபோடுவதாக இருந்து விடக் கூடாது. முன்பே கூறியது போல் இப்படியான விநியோகம் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்கு உட்படாது என்றாலும் அவசியத் தேவைச் (necessity) சட்டத்தின் அடிப்படையில் அதனை நியாயப்படுத்த முடியும். அசாதாரண நிலைமைகளை கையாள அசாதாராண வழிமுறைகள் தேவைப்படும்.
இந்த நெருக்கடி நேரத்தில் எம் மக்களுக்கு அவர்களுக்குரிய கண்ணியமும் ஆதரவும் கிட்டுவதை உறுதி செய்யும் பொருட்டு புலம்பெயர் தமிழர்களோடும் பன்னாட்டு முகமைகளோடும் ஒருங்கிணைந்து செயல்பட நாடுகடந்த தமிழீழ் அரசாங்கம் தயாராக உள்ளது. அமெரிக்காவும் மற்ற நாடுகளும் சிறிலங்கா அரசைக் கடந்து, வடகிழக்கிலும், மலையகத்திலும் ஏற்பட்டுள்ள இன்னல்களை நேரிடையாக அணுக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


