21 வது நினைவு சுனாமி நினைவேந்தல்!
உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் சுனாமி நினைவு தினம் !
சுனாமி பேரலையின் 21 ஆவது சுனாமி நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து தேசிய கொடியினை முள்ளியான் கிராம அலுவலர் ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அஞ்சலி உரையை கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலய பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் நிகழ்த்தினார்.
இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி தாக்கத்தின் 21 வது நினைவு தினம்- மட்டு. ஓந்தாச்சிமடத்தில் சுனாமி நினைவேந்தல்!
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்;டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்நிலையில் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று (26) காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 21 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2025இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் !
சுனாமி பேரவலத்தின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதன்போது நினைவு கூரப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஏற்றி வைத்திருந்தார்.
இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அங்கு கலந்து கொண்டிருந்தவர்களால் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


