வன்னியை இந்தியப் படைகளின் புதைகுழிகளாக மாற்றிய பசீலன்!
எதிரிகளுக்கு எதிராக பாவித்த உத்திகளின் விளைவாகப் பிறந்த எறிகணைச் செலுத்தி 'பசீலன்- 2000'
தமிழீழத்தின் சமர்க்கள முன்னோடி மேஜர் பசீலன் நினைவுகளுடன்.. (08.11.1987)
இந்த நூற்றாண்டின் ஒரு போரியல் சாதனையும், தமிழர்களின் படைத்துறைப் பெருமிதங்களில் ஒன்றுமான
நான்காம் கட்ட ஈழப் போரின் போது நாகர்கோயிலிலிருந்து முகமாலை மற்றும் கிளாலி வரை நீண்டிருந்த தெற்காசியாவின் மிக நீண்ட இராணுவ வேலியை எதிரிகள் உடைக்க முடியாத யுக்திகளுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிகேடியர் தீபனின் போராளுமையை பிரிகேடியர் பால்ராஜை தவிர்த்து விட்டுப் பேச முடியாது. ஏனென்றால் பால்ராஜின் வளர்ப்புத்தான் தீபன். அதன் தொடர்ச்சியாக சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜின் படைத் திறனை, ஆற்றலை மேஜர் பசீலனைத் தவிர்த்து விட்டு அளவிட முடியாது.
' பசீலன் அண்ணைதான் எனக்கு சண்டை பழக்கினவர்' என்பது பால்ராஜ் அடிக்கடி சொல்லும் வாக்கியம்.
நியூட்டன் சட்டகம் எனப்படும் பழமையான / வழமையான போர் உத்திகளின் வழி முன்பு சிங்களப் படைகள் வன்னிப் போர்க்களங்களில் நகர்ந்த போது தலைவரின் வழிகாட்டலில் பிறந்த தற்போது நாம் விளிக்கும் 'பிரபாகரன் சட்டகம்' எனும் நவீன போரியல் உத்திகளை களத்தில் அறிமுகம் செய்து எதிரிகளை அலற விட்டார் மேஜர் பசீலன்.
அவர் புலிகளை எதிரிகளுக்குள் ஊடுருவ விட்டு கிளைமோரைக் கையாண்ட விதம் சிங்களப் படைகளுக்குத் திகிலூட்டும் அனுபவங்களாக மாறியது.
யாழ் குடாவில் தலைவர் இந்திய முற்றுகைக்கு உள்ளான போது எந்த அணியை வைத்துத் தலைவரை வன்னிக்கு நகர்த்துவது என்று மத்திய குழு யோசித்த போது எல்லோரும் உச்சரித்த பெயர் பசீலன். அது போலவே தலைவரைப் பத்திரமாக மணலாறு காட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்.
தொடர்ந்து வன்னியை இந்தியப் படைகளின் புதைகுழிகளாக மாற்றிய பசீலன் கோப்பாயில் இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிட்டு டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி விட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
புலிகள் யார் என்பதை டெல்லி அதிகார மையம் சந்தேகத்திற்கிடமின்றிப் புரிந்து கொண்ட நாள் அது.
பின்னாளில் தலைவர் பசீலனின் போர் உத்திகளை கவுரவிக்கும் முகமாக பசீலன் பயிற்சி பாசறையையும், பசீலன் கிளைமோர்களை எதிரிகளுக்கு எதிராக பாவித்த உத்திகளின் விளைவாகப் பிறந்த எறிகணைச் செலுத்திகளுக்குப் 'பசீலன்- 2000' என்றும் பெயரிட்டார்.
இன்று நாம் கொண்டாடும் பல தாக்குதல் தளபதிகள் - போராளிகள் பசீலன் பயிற்சிப் பாசறையிலிருந்து வெளியேறியவர்கள் தான்.


