வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்; தேர்தல் ஆணையாளர் விசேட அறிவிப்பு
.
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டாலும் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினச் சட்டம் பிரச்சாரச் செலவினங்களுக்கான சட்ட வரம்புகளை அமைக்கிறது என ஆணையாளர் நாயகம் ஊடக அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
இந்த வரம்புகளை மீறுவது சட்டவிரோதமானது என்பதுடன் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
“தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிக்கை 10 நாட்களுக்கு பொதுவெளியில் காட்டப்படும்.
வேட்பாளர் ஒருவர் அதிகமாகச் செலவு செய்வது கண்டறியப்பட்டால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவர்களது அலுவலகத்தை ரத்து செய்ய முடியும்” என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்த செலவு வரம்புகளை விரைவில் இறுதி செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா செலவிடுவது போதாது என அரசியல் கட்சிகள் வாதிடுவதுடன், இந்த வரம்பை 250-400 ரூபாவாக அதிகரிக்க முன்வந்துள்ளன.
எவ்வாறாயினும், சில தரப்பினர் செலவு வரம்பை 7 பில்லியன் ரூபாவாக நிர்ணயம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.