அரசாங்கம் 100 பில்லியன் ரூபாவை அச்சடித்ததா?: செய்தியின் உண்மைத்தன்மை என்ன ?
.
இங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக கடந்த காலங்களில் பல்வேறு செய்திகள் பிரதான ஊடகங்களிலும், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
எனினும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்பதையும் தவறாக மக்களை வழிநடத்தும் விதத்தில் இவ்வாறான போலிச்செய்திகள் பகிரப்படுவதாகவும் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன தெரிவித்துள்ளன.
ஆகவே, இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து factseeker அவதானம் செலுத்தியதுடன், சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பணம் அச்சடிக்கப்பட்டதாக கூறும் செய்தியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்தது.
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக அக்டோபர் 27, 2024 அன்று, economynext தனது இணையதளத்தில் “திறந்த சந்தைச் செயல்பாடுகள் மூலம் ரூ100 பில்லியன் அச்சிடுகிறது” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
அதில், இலங்கை மத்திய வங்கி ஒரு இரவு ஏலத்தில் 36.16 பில்லியன் ரூபாவையும், ஏழு நாள் ஏலத்தில் 70 பில்லியன் ரூபாவையும் வங்கிக் கட்டமைப்பிற்கு வழங்கியதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தக் கட்டுரைக்கு அமைய, அக்டோபர் 25 வரை, மத்திய வங்கியின் நிலையான வசதிகளில் வைப்பு செய்யப்பட்ட அதிகப்படியான பணப்புழக்கம் 193.4 பில்லியன் ரூபாயாக இருந்ததாகவும் (ஒரு மாதத்திற்கு முன்பு 138 பில்லியன் ரூபாயாக இருந்தது) தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் அதுவே ஊடகங்களில் செய்தியாக வெளியாகின.
மத்திய வங்கி குறுகிய கால பணத்தை திரட்டும் பொறிமுறையாக கால ஏலம் மற்றும் ஒரே இரவில் ஏலம் மூலம் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி அக்டோபர் 25, 2024 அன்று (வெள்ளிக்கிழமை) ஒரே இரவில் ஏலத்தின் மூலம் 36.16 பில்லியன் தொகை நாட்டின் நாணய அமைப்பிற்குள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரத்தின் கடைசி 7 நாட்கள் கால ஏலத்தின் மூலம் மத்திய வங்கியால் அச்சடிக்கப்பட்ட தொகை 70 கோடி ரூபா என்றும் அவரது அறிக்கையில் கூறப்படுகிறது.
இந்த அரசாங்கம் பணம் அச்சடித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஊடகங்கள் முன்னிலையில் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நாணயம் அச்சிடல் என்றால் என்ன?
நாணயம் அச்சிடல் என்பதன் பொதுவான அர்த்தம் பொருளாதாரத்திற்கு புதிய பணத்தை வழங்குவதாகும் என்பதுடன் பொருளியல் சொல்லாடலில் மத்திய வங்கியொன்றின் மூலம் வழங்கப்படுகின்ற புதிய பணம் ‘ஒதுக்குப் பணம்’ அல்லது ‘தளப் பணம்’ என அறியப்படுகின்றது.
பணம் அச்சிடல் செயல்முறை 3 வழிமுறைகளில் நடைபெறுகிறது.
முதல் வழிமுறை: மத்திய வங்கியே கருவூலப் பத்திரங்களை வாங்குகிறது.
செப்டம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வந்த 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காக முதன்மை சந்தையில் அரசாங்கப் பத்திரங்களை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தை அச்சிடுவதை இலங்கை மத்திய வங்கி தடை செய்துள்ளது.
அதாவது மத்திய வங்கி இனி நேரடியாக அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை பணத்தை அச்சிடுவதன் மூலம் நிதியளிக்க முடியாது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியானது திறந்த சந்தை செயற்பாடுகள் மூலம் இன்னமும் பணப்புழக்கத்தை பொருளாதாரத்தில் செலுத்த முடியும்.
திறந்த சந்தை செயல்பாடுகள் இரண்டாம் நிலை சந்தையில் அரசாங்க பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பதை உள்ளடக்கியது, அவை வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் குறுகிய கால வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட இலங்கை மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட முடியாது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள அரச பத்திரங்களின் முகமதிப்பு மாறாமல் இருப்பதன் மூலம் தற்போது மத்திய வங்கி இவ்வாறான நாணயத் தாள்களை அச்சிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது வழிமுறை: வெளிநாட்டு இருப்புக்களை உருவாக்க வங்கிகள் வைத்திருக்கும் டொலர்களை மத்திய வங்கி பெற்றுக்கொள்ளும் முறைமை.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள வெளிநாட்டு கையிருப்பு தொகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் எதுவும் இல்லாததால், அதற்கான பணம் அச்சிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்.
மூன்றாவது வழிமுறை: தினசரி வங்கிப் பரிவர்த்தனைகளில் குறுகிய கால பணப்புழக்கத்திற்காக கணினியில் பணத்தை குறுகிய கால வெளியீடு இலங்கை மத்திய வங்கி தற்போது திறந்த சந்தை நடவடிக்கைகளின் ஊடாக பணப்புழக்கத்தை வழங்குவதற்கு செயற்படுவதை அவதானிக்க முடிந்தது.
FactSeeker இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ‘திறந்த சந்தை தொழிற்பாடுகள்’ என்பதன் கீழ் ‘நாளாந்த தொழிற்பாடுகள்’ மற்றும் மீள் கொள்வனவு / நேர்மாற்று மீள் கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள்’ ஆகியவற்றைச் சரிபார்த்தபோது எகானமிநெக்ஸ்ட் மற்றும் ரோஹினி விஜேரத்ன கவிரத்ன வழங்கிய புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தியது.
ஒக்டோபர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணம் சம்பாதித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தெரிவித்தார்.
அதன் பின்னர், இலங்கை மத்திய வங்கி இது குறித்து தமது பக்க தெளிவுபடுத்தலை 2024.10.29 அன்று ஊடக அறிக்கை மூலமாக வெளியிட்டது.
அதில், 2024 காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையில் நிலவிய மிகைகளுக்கு மத்தியில் விடாப்பிடியான திரவத்தன்மை சமச்சீரின்மை காரணமாக இலங்கை மத்திய வங்கி அடிக்கடி திரவத்தன்மை உட்செலுத்தல்களை மேற்கொண்டது எனவும், பணச் சந்தை மிகையான திரவத்தன்மையுடன் தொழிற்பட்ட போதிலும், இம் மிகைகள் வர்த்தக வங்கிகளுக்கிடையில் ஒழுங்கற்று பரம்பியிருந்து, பொருளாதார நடவடிக்கையின் மூலமாக விளங்குகின்ற வாடிக்கையாளர்களுககான கடன்வழங்கல் உள்ளடங்கலாக உள்நாட்டு வங்கிகளின் நாளாந்தத் தொழிற்பாடுகளுக்கு அவற்றுக்கு திரவத்தன்மைத் தேவைகளைத் தோற்றுவித்தன.
நாட்டுக்கான கொடுகடன் தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டதன் பின்னர் வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு கண்டிப்பான கடனளவு வரையறைகள் காரணமாக சில வர்த்தக வங்கிகள் கடுமையான திரவத்தன்மைப் பற்றாக்குறைகளை எதிர்கொண்டன.
இலங்கையில் தொழிற்படுகின்ற வெளிநாட்டு வங்கிகள் மூலமான பணச் சந்தைக் கடன் வழங்கலானது கண்டிப்பான கடனளவு வரையறைகளை காரணமாக அவ்வங்கிகளின் குறிப்பிடத்தக்க திரவத்தன்மை மிகைகளுக்கு மத்தியிலும் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டே காணப்பட்டது.
ஆகையினால், இலங்கை மத்திய வங்கியின் திரவத்தன்மை உட்செலுத்தல்கள் இப்பற்றாக்குறைகளைத் தீர்த்து குறுகிய கால வட்டி வீதங்கள், விசேடமாக அழைப்புப் பண வீதங்கள் நிலையுறுதியாகக் காணப்படுகின்றது என்பதை உறுதிசெய்தன.
இலங்கை மத்திய வங்கி அதன் கிரமமான திறந்த சந்தை தொழிற்பாடுகளின் பாகமொன்றாக அதன் மூலம் கொண்டு நடாத்தப்படுகின்ற ஏலங்களினதும் நாணயத் தொழிற்பாடுகளினதும் விபரங்களை உள்ளடக்கியுள்ளன.
ஆகையினால், அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு பணம் அச்சிடலோ அல்லது முறையற்ற திரவத்தன்மை வழங்கலோ இடம்பெறவில்லை.
இந்நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியின் விலை நிலையுறுதிக் குறிக்கோளை அடைவதை நோக்காகக் கொண்ட நாணயத் தொழிற்பாடுகளின் நியமச் செயன்முறையின் பாகமொன்றாகும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி ஒரே ஏலத்தின் மூலம் 36.16 பில்லியன் ரூபாவையும், 7 நாள் ஏலத்தின் மூலம் 70 பில்லியன் ரூபாவையும் பணப்புழக்கப் பற்றாக்குறையைக் கணக்கிட்டு விடுவித்துள்ளதாக FactSeeker உறுதிப்படுத்துகிறது.