சஜித் வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவராக ஹர்ஷவை நியமிக்கவும்
.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைக்கும் நடவடிக்கையாக தலைமைத்துவ சபையொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ள அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சியின் தலைமைத்துவ காலத்தில் தலைமைத்துவ சபையை நியமித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான முன்மொழிவு தற்போது அதிகாரப்பூர்வமற்ற மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த யோசனையை முன்வைத்த சிரேஷ்ட தலைவர்கள், தலைமைத்துவ சபைக்கு பொருத்தமான கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் இருப்பதால் அதற்கேற்ப அவர்களை நியமிக்க வேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளனர்.
இதேவேளை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க வேண்டும் எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலிலும் பாரிய தோல்வியை அக்கட்சி சந்தித்திருந்தது. இதன் மூலம் 9 ஆவது பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டிருந்த பாராளுமன்ற ஆசனங்களைக்கூட இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை.
பாராளுமன்ற ஆசனங்களில் பல கூட்டணி கட்சிகளுக்கு சொந்தமாகவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் நேரடியாகப் போட்டியிட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் தோல்வியடைந்த நிலையில் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை பகிர்வதிலும் தொடர்ந்தும் சர்ச்சை நிலவியது. இதனால் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதனால் எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வெற்றியீட்டும் நோக்குடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய தலைமைத்துவ சபையொன்றை நிறுவுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.