“ரணில் – ராஜபக்ச அல்ல சஜித் – ராஜபக்ச“
.
ரணில் விக்ரமசிங்கவிடம் எந்தவொரு டீல் அரசியல் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த தலதா,
“பணம் செலுத்த முடியாமல் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களில் இருந்த கேஸை கரைக்குக் கொண்டு வர ஜனாதிபதி தான் பங்களித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும் கடன் கிடைக்காது என்றும் எதிரணியில் இருந்த பொருளாதார நிபுணர்கள் கூறிவந்தனர். ரணில் ராஜபக்ஷ என்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யாகியுள்ளன.
ரணில் – ராஜபக்ஷ அல்ல சஜித் – ராஜபக்ஷ என்று தான் கூற வேண்டும். அவரைப் பிரதித் தலைவராக கொண்டுவர சிரச பாடுபட்டது. இன்று ஹிருவின் உதவியை பெற அவர் சிரசவை மறந்து விட்டார். டீல் அரசியலை நிறுத்த வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவிடம் டீல் அரசியல் கிடையாது. வங்கித் திருடன் என்று விமர்சித்தவர்கள். அவரை தேடி வந்து ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அவரை தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்.