18 மாத சட்ட போராட்டத்தின் பின் அமைதியாக விடைபெற்ற நோலியா !
நீதிமன்ற அனுமதியுடன் கருணைக்கொலை நிறைவேற்றம் – ஸ்பெயினை உலுக்கிய சோக சம்பவம்!
18 மாத சட்ட போராட்டத்தின் பின் அமைதியாக விடைபெற்ற பெண் – நீதிமன்ற அனுமதியுடன் கருணைக்கொலை நிறைவேற்றம் – ஸ்பெயினை உலுக்கிய சோக சம்பவம்!
வன்பொடுமை மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் மனதளவில் உடைந்திருந்த ஸ்பெயினைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காகத் தந்தையுடன் நீண்டகாலமாக நடத்திய சட்டப்போராட்டத்தின் இறுதியில் நேற்று (26) மாலை கருணைக்கொலை மூலம் அமைதியாக விடைபெற்றுள்ளார்.
பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா, 2022ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்பொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றபோது, அவரது இடுப்புக்கு கீழ்ப்பகுதி முழுமையாகச் செயலிழந்தது.
“நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” எனக் கூறி, கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக்கொள்ள அவர் அனுமதி கோரினார்.
நோலியாவின் தந்தை தனது மகளின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
மகளுக்கு ‘ஆளுமைக் குறைபாடு’ (Personality Disorder) இருப்பதாகவும், அதனால் அவரால் சரியான முடிவை எடுக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
கத்தோலிக்க திருச்சபை மற்றும் சில கிறிஸ்தவ அமைப்புகள் தந்தைக்கு ஆதரவாக நின்றன. “துன்பத்திற்கு மரணம் தீர்வாகாது” என்றும், அரசாங்கம் அவரைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 18 மாதங்கள் நீடித்த இந்த வழக்கில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் மற்றும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் ஆகியவை நோலியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டன. ஒரு நபர் தனது மரணத்தைத் தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
ஸ்பெயினில் 2021ஆம் ஆண்டு கருணைக்கொலை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு நீதிபதி தீர்ப்பளிப்பதற்காகவே நீதிமன்றம் வரை சென்ற முதல் வழக்கு இதுவாகும். மனநலப் பாதிப்பு மற்றும் உடல் ஊனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருவரின் சுய விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


