60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா: அரசாங்கம் நடவடிக்கை
.
இதன்படி, இம்மாத இறுதிக்குள் அதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விரிவாக்கத்திற்கான அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதற்காக சுற்றுலா அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விசா கொள்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி அண்மையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை நியமித்திருந்தார்.
அவர்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்று பெர்னாண்டோ கூறினார்.
இலவச விசா வசதி உள்ள நாடுகளின் எண்ணிக்கையை 60க்கு மேல் அதிகரிப்பதை இந்த முன்மொழிவு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது நாடு பிராந்திய போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கும், வருடத்திற்குள் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற நாட்டின் லட்சிய இலக்கை அடைவதற்கும் அதிக நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த மாதம் கூறியிருந்தார்.
67 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்மொழிவு தொடர்பான விசேட குழு அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசாங்கத்தின் பல முயற்சிகளை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளிப்படுத்தியுள்ளார்.