மகிந்தவே எம்மை ரணிலிடம் அனுப்பினார்
.
மகிந்த ராஜபக்ஷவே தங்களை ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுப்பி வைத்தார் என்றும், நாமல் ராஜபக்ஷவை மனப்பூர்வமாக அவர் ஜனாதிபதி வேட்பாளராக்கவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது மகிந்தானந்த மேலும் தெரிவித்துள்ளதாவது,
முதலிலேயே நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக்க உள்ளதாக கூறியிருந்தால் கலந்துரையாடல்களுக்கு சென்றிருக்காலம். ஆனால் இந்த நேரத்தில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராகியிருக்கக் கூடாது. அவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. இந்த நேரத்தில் எடுத்துள்ள தீர்மானம் நாமலின் அரசியல் எதிர்காலத்திற்கே பாதிப்பாக அமையும்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்களாகவே வரவில்லை. மகிந்த ராஜபக்ஷவே அனுப்பிவைத்தார். நாங்கள் ரணிலை முதலில் ஆதரிக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ ஆகியோரே ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறினர். ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நியமிப்பதில்லை என்று தீர்மானம் எடுத்ததுடன் மகிந்த ராஜபக்ஷவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன்படி நாமலை நியமிப்பதில்லை என்றும் கூறினார். ஆனால் நாமலின் கடும் அழுத்தத்திற்கு மத்தியிலேயே அவரை வேட்பாளராக நியமிக்க தீர்மானித்துள்ளார். மனப்பூர்வமாக மகிந்த இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளனர். ஆனால் சமல் ராஜபக்ஷ போன்றோரை அவரின் மேடைகளில் கணவில்லை.
இந்த நேரத்தில் மக்கள் எங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு காலம் வழங்க வேண்டும். சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து எங்களையே விமர்சிக்கின்றனர்.