போர் அச்சத்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் அகதிகள்! - சிங்கள தேசத்தின் கரிசனை?
.
போரினால் பாதிக்கப்பட்ட அகதிகள் குழு முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
போர் அச்சத்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் இந்த 103 ஆதரவற்ற மக்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் நம்பிக்கையாகும்.
அவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதே அரசின் திட்டம் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ரோஹிங்கியாக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது மியன்மாரில் வசிக்கும் அவர்களது உறவினர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
“இது இந்த மக்களின் உயிருக்கு மாத்திரமல்ல, மியன்மாரில் வாழும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை.”
மேலும், அவர்களை மியன்மாருக்கு அனுப்புவது, குறிப்பிட்ட நாட்டில் ஆபத்தில் இருக்கும் மக்களை விருப்பமின்றி திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் (Non-Refoulement) சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் குழுவை வலிந்து வெளியேற்றுவது ‘யமனின் வாய்க்கு’ அனுப்புவது போன்றது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர், உலக நாடுகளுக்கு முன்பாக நாட்டின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய கதி குறித்தும் எச்சரித்துள்ளார்.
“உங்கள் ஆட்சியின் போது, நாட்டிற்குள் நுழைந்த முதல் அகதிகள் குழுவை, அவர்கள் வந்த நாட்டின் யமனின் வாய்க்கு அனுப்புவது உலக நாடுகளுக்கு முன் நாட்டிற்கு ஒரு கறையாக மாறும்.”
இனக்கலவரங்களால் பாய்ந்த இரத்தத்தில் நனைந்த மண்ணின் மக்கள் அந்த விதியிலிருந்து மீட்கப்படவில்லை என்பது தெரிந்தே, இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணைக் குணப்படுத்துவேன் என தனது கன்னி உரையில் உறுதியளித்து, அரச அடக்குமுறையின் கசப்பான அனுபவங்களைக்க கொண்ட அரச தலைவரான ஜனாதிபதிக்கு இது பொருத்தமான நடவடிக்கையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“பல தசாப்தங்களாக பாதாள அரசியலில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான நீங்கள், அரச அடக்குமுறையின் அளவை கசப்பான அனுபவத்திலிருந்து அறிவீர்கள். ”
எனவே, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வேறு நாட்டிற்கு அனுப்பப்படும் வரையில் அவர்களை மியன்மாருக்கு அனுப்பாமல், அவர்களின் நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாத்து ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இலங்கையின் விருந்தோம்பலின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
அந்த நல்ல செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளின் ஆதரவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்