டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு இந்த முறை எப்படி இருக்கும்? வட கொரிய அதிபர் என்ன செய்வார்?
,
கிம் ஜாங் உன்னுடான வரலாற்று சந்திப்பிற்காக எதிரி மண்ணில் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாகக் காலடி வைத்தபோது, அதைத் தெளிவாக படம் பிடிக்க கேமராக்கள் சிரமப்பட்டன.
அது 2019ஆம் ஆண்டு. அமெரிக்காவின் அப்போதைய 45ஆவது அதிபர், வடகொரிய தலைவரின் கையை தட்டிக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக கிம், டிரம்பை தென் கொரியாவில் இருந்து தனது நாட்டைப் பிரிக்கும் எல்லையைத் தாண்டி அழைத்துச் சென்றார்.
அவர்களுக்குப் பின்னால், ராணுவம் நீக்கப்பட்ட பகுதியில், வடகொரிய பாதுகாவலர்களைத் தாண்டி ஒரு தெளிவான காட்சி கிடைக்க தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர்.
ஒரு கட்டத்தில், செய்தியாளர் ஒருவர் உதவி கோர, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் அவர்களை பாதுகாவலர்களுக்குப் பின்னால் இருந்து மீட்டு, டிரம்ப்- கிம் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
அந்தச் சந்திப்பு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. "உங்களை நான் இந்த இடத்தில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை," என டிரம்பிடம் கூறினார் கிம்.
அப்போது டிவிட்டர் என அறியப்பட்ட சமூக ஊடகத்தின் மூலம்தான் அந்தச் சந்திப்பையே டிரம்ப் ஏற்பாடு செய்தார். சேர்மன் கிம்மை ராணுவ கட்டுப்பாடு அற்ற பகுதியில் சந்தித்து கைகளைக் குலுக்கி ஹலோ சொல்ல விரும்புவதாக, சந்திப்பு நடப்பதற்கு வெறும் 30 மணிநேரத்திற்கு முன்பு, டிவிட்டரில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
அந்த திடீர் அழைப்புதான், விளம்பரப் பிரியரான ஒரு அதிபரும், தனிமை விரும்பியான ஒரு சர்வாதிகாரியும் சந்தித்துக்கொண்ட நம்ப முடியாத தருணத்தை உருவாக்கியது.
இப்போது அதேபோல மேலும் நிறைய நடக்கலாம் எனத் தெரிகிறது. பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் சான் ஹேனிட்டிக்கு கடந்த வியாழக்கிழமை அளித்த ஒரு நேர்காணலில், தாம் மீண்டும் கிம்மை தொடர்புகொள்ள இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
"அவருடன் என்னால் பழக முடிந்தது," என்று சொன்ன டிரம்ப், "அவர் மதவெறி பிடித்தவர் அல்ல. அவர் ஒரு புத்திசாலி" என்றும் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே வெகு குறைவான தொடர்பே இருந்ததாகத் தெரிகிறது. அமெரிக்கா அழைப்புகளை அனுப்பியுள்ளது, ஆனால் பியாங்யாங்கில் இருந்து பதிலேதும் வரவில்லை.
முன்பு டிரம்ப் பதவியில் இருந்தபோது, இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த கடைசி பேச்சுவார்த்தையில், வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
அதன் பின்னர், பல கடுமையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டாலும், கிம் தனது ஏவுகணை தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதுடன், ஒலியைவிட வேகமாகப் பாய்ந்து தாக்கும் ஏவுகணையைத் தயாரித்திருப்பதாகவும் கூறுகிறார்.
தாங்கள் இருவரும் "அன்புவயப்பட்டுவிட்டதாக" டிரம்ப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திற்கும், இதற்கும் வெகு தொலைவு உள்ளது.
'அந்த உறவை மீட்டெடுக்க முடியுமா அல்லது இம்முறை கதையே வேறுவிதமாக இருக்குமா?' என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.
அமெரிக்கா இப்போது முற்றிலும் வேறு மாதிரியான ஒரு கிம்மை எதிர்கொள்ளும். கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது கூட்டணிகளும், அவரது அதிர்ஷ்டமும் மாறிவிட்டன. மற்றொரு உலகத் தலைவருடனான அவரது நட்பும் வலுவடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகையால், இவையெல்லாம் டிரம்புடனான கிம்மின் உறவை நிரந்தரமாக மாற்றிவிட்டன எனப் பொருள் கொள்ளலாமா?