ரஷ்ய தளபதியின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவில் இடம்பெற்ற இத் தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன், இந்தத் தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்(Moscow) மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.
அத்துடன், அவருடன் இருந்த இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் துணை அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கீவ் நகரில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு குடியிருப்பு வளாகங்களுக்குள் தீ பரவியுள்ளது.
இந்தநிலையில், 630 குடியிருப்பு கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெப்பமூட்ட முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.